புதுடில்லி :’சமூக வலைதளங்களை ஒழுங்குபடுத்தும் வகையில், விரிவான நெறிமுறைகள் விரைவில் அறிமுகம் செய்யப்படும்’ என, புதுடில்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு
தெரிவித்துள்ளது. சமூக வலைதளங்களில் ஆட்சேபகரமான பதிவுகளை வெளியிடுவோரின் கணக்குகள் முடக்கப்படுகின்றன; ரத்து செய்யப்படுகின்றன. இதை எதிர்த்து பலர் தொடர்ந்த வழக்குகளை புதுடில்லி உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
‘இந்த விவகாரத்தில் சமூக வலைதளங்களை கட்டுப்படுத்தும் வகையில் வழிமுறைகளை வகுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா?’ என, உயர் நீதிமன்றம் ஏற்கனவே கேள்வி எழுப்பியிருந்தது.இந்த வழக்கின் விசாரணை நேற்று மீண்டும் வந்தது. அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கீர்த்திமான் சிங் கூறியதாவது:
ஆட்சேபகரமான கருத்துகளை பதிவிடுவோரின் கணக்குகளை சமூக வலைதளங்கள் முடக்குகின்றன. சில நேரங்களில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கின்றன. சிலரின் கணக்குகள் ரத்து செய்யப்படுகின்றன.இவ்வாறு எந்தெந்த சந்தர்ப்பங்களில் நடவடிக்கை எடுக்கலாம் என்பதற்கு, சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடுகள் தேவை.
இதற்கான நெறிமுறைகளை மத்திய அரசு உருவாக்கி வருகிறது. அது எப்போது இறுதி செய்யப்படும் என்பதை தற்போதைய நிலையில் கூற முடியாது.அதனால், தற்போது உள்ள வழக்குகளை, நடைமுறையில் உள்ள சட்ட விதிகளுக்கு உட்பட்டே நீதிமன்றங்கள் முடிவு எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இதையடுத்து, வழக்கின் விசாரணை, டிச., மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement