சட்ட விரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள, சிவசேனா கட்சியின் மூத்தத் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவத்தை சந்திக்க, அக்கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
சிவசேனா கட்சித் தலைவரும், மகாராஷ்டிர மாநில முன்னாள் முதலமைச்சருமான உத்தவ் தாக்கரேவுக்கு மிகவும் நெருக்கமானவர், சஞ்சய் ராவத். இவர், சிவசேனா கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் மற்றும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகியதில் இருந்து அக்கட்சியை கடுமையாக சஞ்சய் ராவத் விமர்சனம் செய்து வருகிறார். அண்மையில் பாஜகவுடன் கூட்டணி வைத்த அதிருப்தித் தலைவர் ஏக்நாத் ஷிண்டேவையும் கடுமையாக விமர்சித்தார்.
இந்நிலையில் பத்ராசால் குடிசை சீரமைப்பு மோசடியில் நடந்த சட்ட விரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் கடந்த மாதம் 1 ஆம் தேதி அமலாக்கத் துறையினர் சஞ்சய் ராவத்தை கைது செய்தனர். பத்ரா சால் மோசடியில் கிடைத்த சட்ட விரோத பணத்தின் ஒரு பகுதி சஞ்சய் ராவத்தின் மனைவி, கூட்டாளிகளுக்கும் வழங்கப்பட்டதாக அமலாக்கத் துறை தரப்பில் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராவத், மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் அவர் நேற்று மும்பையில் உள்ள சட்ட விரோத பணப் பரிமாற்ற தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் சஞ்சய் ராவத்தின் நீதிமன்றக் காவல் வரும் 19 ஆம் தேதி வரை மேலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதை அடுத்து அவர் மீண்டும் ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சஞ்சய் ராவத்தை சந்திக்க, சிவசேனா கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான உத்தவ் தாக்கரேவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சிறையில் சஞ்சய் ராவத்தை சந்திக்க, உத்தவ் தாக்கரே அனுமதி கோரியதாகவும், ஆனால், நீதிமன்ற அனுமதி பெற்று சஞ்சய் ராவத்தை சந்திக்குமாறு சிறை அதிகாரிகள் தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.