சென்னை நாரத கான சபாவில் செப்.9-ல் ‘தீர்க்காயுஷ் பவன்’ ஓஹோ புரொடக் ஷன்ஸின் நகைச்சுவை நாடகம்

சென்னை: சென்னையை சேர்ந்த நாடகக்கலைஞர்கள் பிரேமா சதாசிவம்,மகேஷ்வர் சதாசிவம், சுப்பிரமணியன், லாவண்யா வேணுகோபால் ஆகியோர் இணைந்து ஓஹோ புரொடக் ஷன்ஸ் எனும் தலைப்பில் நாடகங்களை தயாரிக்கின்றனர்.

அதன் நிறுவனர்களில் ஒருவரான மகேஷ்வர் சதாசிவம், விரைவில் அவர்கள் அரங்கேற்ற உள்ள நாடகம் குறித்து கூறியதாவது:

எங்கள் முதல் நாடகமான ‘டைட்டில்’, மிகவும் குறுகிய காலத்தில் 10 முறை பல்வேறு சபாக்களில் அரங்கேறியது. இந்த நாடகத்தை எழுதிய வத்ஸனுக்கு சிறந்த வசனகர்த்தாவுக்கான விருது, கோடை நாடக விழாவில் வழங்கப்பட்டது.

எங்கள் 2-வது தயாரிப்பு ‘தீர்க்காயுஷ் பவன்’ என்ற நாடகம். இதை நந்து சுந்து எழுதியுள்ளார். நாடகத் துறையில் அனுபவமிக்க எஸ்.பி.காந்தன், நாடக உருவாக்கத்துக்கான நிபுணர் உள்ளீடுகளை செய்துள்ளார்.

ராஜா – பார்வதி தம்பதியர் ஒரு பண்ணை இல்லம் வாங்க முடிவு செய்கின்றனர். அனைத்து நடைமுறைகளும் முடிந்து, இல்லத்தை அவர்கள் பெயருக்கு மாற்றும் முன்பு, வீடு சவுகரியமாக உள்ளதா என சோதித்துப் பார்க்க அங்கு தங்குகின்றனர். வீட்டு உறுப்பினர்கள் எல்லோருக்கும் வீடு பிடித்துப்போக, கிரகப்பிரவேசத்துக்கு நாள் குறிக்கின்றனர்.

எதிர்பாராதவிதமாக பல்வேறு குணாதிசயங்கள் கொண்ட சிலர் ஒவ்வொருவராக அந்த வீட்டில் நுழைந்து வலுக்கட்டாயமாக தங்குகின்றனர்.

அவர்கள் செய்யும் ரகளையும், அதை தாண்டி கிரகப் பிரவேசம் நடந்ததா என்பதையும் எதார்த்தமான நகைச்சுவையோடு விவரிக்கிறது ‘தீர்க்காயுஷ் பவன்’ நாடகம்.இந்த நாடகம் செப்டம்பர் 9-ம் தேதி கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் ஆதரவுடன் சென்னை நாரத கான சபாவில் அரங்கேற உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.