சேலத்தில் பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

சேலம்: சேலத்தில் பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். சேலம் டவுனில் பழமைவாய்ந்த பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 1998ம் ஆண்டுக்கு பின்னர், 24 வருடங்கள் கழித்து நடப்பாண்டு கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக கடந்த 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் இருகட்டமாக பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கியது. இதனையடுத்து கிழக்கு, மேற்கு ராஜகோபுரங்கள், மூலவர் விமானங்கள், கொடிமரம், கோயில் வளாகம் முழுமையாக சீரமைக்கப்பட்டு கும்பாபிஷேக பணிகள் நடந்தது.

தொடர்ந்து, கோயில் வளாகத்தில் உள்ள  கோசாலை அருகே, 54 யாக குண்டங்களுடன் பிரம்மாண்ட யாகசாலை அமைக்கப்பட்டது. மேலும், 700க்கும் மேற்பட்ட கலசங்கள் யாக சாலையில் வைக்கப்பட்டது. இதேபோல் யாகசாலை முழுவதும் வண்ண தோரணங்கள் கட்டப்பட்டு அலங்கரிக்கப் பட்டது.
கோயிலில் இருந்து யாகசாலைக்கு வரும் வழியில், விநாயகர், முருகன், சுகவனேஸ்வரர், நடராஜன் உள்பட பல்வேறு சிலைகள் வைக்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த 1ம் தேதி, 120 சிவாச்சாரியார்களுடன், கும்பாபிஷேக பூஜைக்கான பூர்வாங்க பணிகள் தொடங்கியது.

பின்னர், கடந்த 4ம் தேதி முதல்கால யாக பூஜை நடத்தப்பட்டது. இதனையடுத்து, 5ம் தேதியன்று இரண்டு, மூன்றாம் கால யாக பூஜையும், அஷ்டபந்தனம் சாத்துப்படியும் நடந்தது. நேற்று நான்கு மற்றும் ஐந்தாம் கால பூஜை நடத்தப்பட்டது. கும்பாபிஷேக நாளான இன்று, அதிகாலையில் பரிவார சுவாமிகளுக்கு யாக பூஜை ஆரம்பமானது.  பரிவார கலசங்கள் புறப்பட்டு, அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் ஆறாம் கால யாக பூஜை ஆரம்பிக்கப்பட்டு, அனைத்து விமானங்கள், ராஜகோபுரங்கள், மூலஸ்தான சாமி, அம்மன், விநாயகர், சுப்ரமணியர், கலசங்கள் புறப்பாடு நடந்தது.

தொடர்ந்து, அனைத்து விமானங்கள் மற்றும் ராஜகோபுரங்களுக்கு சமகால மகா கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது கோயிலை சுற்றியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், நமச்சிவாய கோஷத்துடன் கோபுர தரிசனம் செய்தனர். பின்னர் கலச தீர்த்தம் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  தொடர்ந்து, சுகவனேஸ்வரர் மற்றும் சொர்ணாம்பிகை அம்மனுக்கு மகா கும்பாபிஷேக தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில், தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஆணையர் குமரகுருபன், மாவட்ட கலெக்டர் கார்மேகம்,

கோயில் அறங்காவலர் குழு தலைவர் வள்ளியப்பா, சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்பி., எம்எல்ஏ அருள், சேலம் ஆறுநாட்டு வேளாளர் சங்க தலைவர் பெரியசாமி, செயலாளர் மணிவண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, பக்தர்கள் கோயிலுக்குள் உள்ள மூலவர்களை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் பிரதான வழியாக சென்று மூலவரை தரிசனம் செய்துவிட்டு, மேற்கு கோபுரம் வழியாக வெளியே வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதேபோல் முக்கிய பிரமுகர்கள் சுப்பராயன் சாலை வழியாக யாகசாலை வந்து, பின்னர் தெப்பக்குளம் வழியாக கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயிலின் மேற்கு கோபுரம் அருகே இரண்டு தனி கூடங்கள் அமைக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, இன்று மாலை சொர்ணாம்பிகை சமேத சுகவனேஸ்வரருக்கு திருக்கல்யாணமும், அதனை தொடர்ந்து பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலாவும் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல் கோடா உத்தரவின் பேரில், நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.