பின் இருக்கையில் அமர்பவர்களும் சீல் பெல்ட் அணிவதை உறுதி செய்யும் வகையில் எச்சரிக்கை சமிக்ஞை வழங்கும் வகையில் வடிவமைப்பில் மாற்றங்கள் மேற்கொள்ள கார் தயாரிப்பு நிறுவனங்களை மத்திய அரசு அறிவுறுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னிருக்கையில் அமருபவர்கள் சீட் பெல்ட் அணியவில்லை என்றால் எச்சரிக்கை சமிக்ஞை கொடுக்கப்படுவது போல பின்னிருக்கையில் அமர்பவர்களும் சீட் பெல்ட் அணிவதை உறுதிப்படுத்த இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது. டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் இயக்குனர் சைரஸ் மிஸ்ட்ரி பின் இருக்கையில் சீட் பெல்ட் அணியாததால், விபத்துக்குள்ளாகியபோது உயிரிழந்த நிலையில் ஒட்டுமொத்த விதிமுறைகளிலும் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் கார்களில் பொதுவாக ஏர் பேக்குகள் முன்னிருக்கையில் அமர்ந்திருப்பவர்களுக்கு விபத்து நேரிடும்போது பாதுகாப்பு அளிக்கும். ஆனால் பெரும்பாலான கார்களில் இந்த பாதுகாப்பளிக்கும் ஏர் பேக் வசதி பின்னிருக்கையில் அமர்ந்திருப்பவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. சைரஸ் மிஸ்ட்ரி மரணத்திற்கு இதுவும் ஒரு காரணமாக வல்லுநர்களால் முன்வைக்கப்படும் நிலையில் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி கார்களின் தயாரிப்பின்போது 6 ஏர் பேக்குகள் அமைப்பதை நிறுவனங்கள் உறுதிசெய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM