டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த மனுவை தலைமை நீதிபதி அமர்வே விசாரிக்கும் என உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், வேலுமணி தரப்பில் மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராக தமிழக அரசு தெரிவித்த ஆட்சேபத்தை நிராகரித்தது.
முந்தைய அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி வேலுமணி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, வழக்கை ரத்து செய்யக் கோரிய வேலுமணியின் மனுவை ஒற்றை நீதிபதி தான் விசாரிக்க வேண்டும் என தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் ஆட்சேபம் தெரிவித்தார்.
மேலும், மத்திய அரசு வழக்கறிஞர் ராஜு, வேலுமணி சார்பில் ஆஜராகவும் எதிர்ப்பு தெரிவித்த தலைமை வ்ழக்கறிஞர், வருமான வரித்துறைக்காக ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் ராஜு எப்படி வேலும்ணிக்கு ஆதரவாக ஆஜராகலாம் எனக் கேள்வி எழுப்பினார்.
மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆஜராகி வருவதாக வேலும்ணி தரப்பு மூத்த வழக்கறிஞர் தெரிவித்தார். வழக்கை ரத்து செய்யக் கோரி வேலுமணி தாக்கல் செய்துள்ள குற்றவியல் மனுவை இரு நீதிபதிகள் அமர்வு விசாரிக்கலாம் என தெரிவித்தார்.
அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்ட ஆட்சேபங்கள் தொடர்பாக, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வு இன்று உத்தரவு பிறப்பித்தது. அதில், டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்குகளை ரத்து செய்யக் கோரி வேலுமணி தாக்கல் செய்த மனுக்களை தலைமை நீதிபதி அமர்வே விசாரிக்கும் என உத்தரவிட்டது.
வேலுமணிக்கு ஆதரவாக மத்திய அரசு வழக்கறிஞர் ராஜு ஆஜராக மத்திய அரசு அனுமதியளித்துள்ளதாகவும், அந்த அனுமதி திரும்பப் பெறப்படவில்லை என்பதால், அவர் ஆஜராக கூடாது என்ற தமிழக அரசின் ஆட்சேபத்தை நிராகரித்த நீதிபதிகள், வேலுமணி மனு மீது இடைக்கால உத்தரவு பிறப்பிப்பது தொடர்பான விசாரணையை செப்டம்பர் 9ம் தேதிக்கு தலைமை நீதிபதி அமர்வு தள்ளிவைத்துள்ளது.