எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தி.மு.க ஒரு குடும்ப கட்சி, கார்ப்பரேட் கம்பெனி. ஆனால், அ.தி.மு.க தொண்டர்கள் ஆளுகின்ற கட்சி. தொண்டர்கள்தான் இப்போது அ.தி.மு.க-வை ஆண்டுகொண்டிருக்கிறார்கள். தொண்டர்களால் நடத்தப்படும் அ.தி.மு.க-வில் தலைவர்களுக்கு இடமில்லை. தினகரன், சசிகலாவுக்கு இடமில்லை என்று ஏற்கெனவே சொல்லிவிட்டேன். நானும் தொண்டன் என்ற முறையில்தான் இங்கு வந்திருக்கிறேன். தலைவர் என்ற முறையில் வரவில்லை.
எந்த பொருள் திருடு போனாலும் அவற்றை முறையாக பாதுகாக்கும் காவல்துறை இங்கு கிடையாது. அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கக்கூடிய முதலமைச்சரும் தமிழ்நாட்டில் கிடையாது. அம்மா உணவகம் மூடப்பட்டதற்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள். எங்களுடன் கூடதான் தி.மு.க-வைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏ-க்கள் எங்களுடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
அ.தி.மு.க அலுவலக தாக்குதல் தொடர்பாக காலம் கடந்து விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. நீதிமன்றம் சென்ற பிறகே போலீஸார் விசாரணையை தொடங்கியிருக்கின்றனர். தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துவிட்டது என்பதற்கு இதுவே சாட்சி” என்றார்.