திருச்சி: மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 50 நாட்களுக்கும் மேல்முழு கொள்ளளவில் நீடிப்பதால்,காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 14 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி நெல் சாகுபடிக்கு வாய்ப்பு இருப்பதாக வேளாண்மைத் துறையினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு வழக்கத்துக்கு முன்பாக மே 24-ம் தேதியே தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, கடலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவாக ஏறத்தாழ 5 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்பட்ட உபரிநீரால் மேட்டூர் அணை, கடந்த ஜூலை 16-ம் தேதி முதல் தொடர்ந்து முழு கொள்ளளவிலேயே நீட்டித்து வருகிறது.
இதன் காரணமாக சம்பா சாகுபடி முழுமைக்கும் தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் டெல்டா மாவட்ட விவசாயிகள் சாகுபடி பணிகளை முழுவீச்சில் தொடங்கியுள்ளனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி பருவத்தில்தான்அதிக பரப்பளவில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும். இந்த ஆண்டுஇந்த மாவட்டங்களில் ஏறத்தாழ 14 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடிநெல் சாகுபடிக்கு வேளாண்மைத் துறையினர் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.
தஞ்சாவூர் திருவாரூர், கடலூர்,நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்கு திருந்திய நெல் சாகுபடி முறையிலும், பழைய முறையிலும் நடவு மேற்கொள்ள ஏறத்தாழ 3,500 ஏக்கரில் நாற்றுகள் விடப்பட்டுள்ளன. சில இடங்களில் நடவுப் பணிகளும் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
இதனால், சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்கள், விதைகள் மற்றும் பயிர்க் கடன் ஆகியவற்றைதடையின்றி வழங்க வேண்டும்என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.