நாடு முழுவதும் 14,000 பள்ளிகளை நவீனப்படுத்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்: ஒன்றிய அமைச்சர் தகவல்

டெல்லி: நாடு முழுவதும் 14,000 பள்ளிகளை நவீனப்படுத்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். 5 ஆண்டுகளில் 14,000 பள்ளிகளை நவீனபடுத்துவதன் மூலம் 18 லட்சம் மாணவர்கள் பெறுவார்கள் என ஒன்றிய அமைச்சர் கூறியுள்ளார்.

பள்ளிகளை நவீனப்படுத்த ஒன்றிய அரசு ரூ.27,360 கோடி ஒதுக்கீடு செய்யும். மாநில அரசுகள் ரூ. 18,128 கோடி ஒதுக்கீடு செய்யவேண்டும் என அமைச்சர் கூறியுள்ளர். ஒன்றிய அரசின் இந்த திட்டத்தில் கேந்திரிய வித்தியாலயா, நவோதயா வித்யாலயா பள்ளிகள் நவீனப்படுத்தப்பட உள்ளது.

2020- ம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கையின் அம்சங்களை வெளிப்படுத்தும் வகையில், ஒன்றிய அரசு நிதியுதவியில் புதிய திட்டத்தின் கீழ், இந்தியா முழுவதும் 14,500 பள்ளிகள் மேம்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி செப். 5-ம் தேதி அறிவித்தார்.

கல்வி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளபடி, இந்தத் திட்டம் பி.எம் ஸ்ரீ பள்ளிகள் (PM Schools for Rising India) என்று அழைக்கப்படும். இதன் கீழ், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 14,500 பள்ளிகள் தேசிய கல்விக் கொள்கை 2020-ன் முக்கிய அம்சங்களை பிரதிபலிக்கும் வகையில் மேம்படுத்தப்படும் என அறிவித்திருந்தார்.

குஜராத்தில் உள்ள காந்திநகரில் ஜூன் மாதம் கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்த ஒரு மாநாட்டின் போது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கல்வி அமைச்சர்களுடன் இந்த திட்டம் முதலில் விவாதிக்கப்பட்டது. மாநிலங்களுடன் கலந்தாலோசித்து இம்முயற்சி முன்னெடுக்கப்படும் என்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அப்போது தெரிவித்திருந்தார். நவோதயா வித்யாலயா பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் போன்ற முன்மாதிரியான பள்ளிகள் இருக்கும்போது, ​​பி.எம். ஸ்ரீ தேசிய கல்விக் கொள்கை ஆய்வகங்களாக செயல்படும் என்று அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று அந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 14,000 பள்ளிகளை நவீனப்படுத்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.