நீட் தேர்வு முடிவுகள்; மாணவர்களை திட்ட வேண்டாம் என அமைச்சர் மா.சுபரமணியன் வேண்டுகோள்

சென்னை சைதாப்பேட்டையில் மார்க்கெட்டை ஆய்வு மேற்கொண்ட பின் அமைச்சர் மா.சுபிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சென்னை சைதாப்பேட்டை மார்க்கெட் என்பது வரலாற்று சிறப்புமிக்க வணிக வளாகப் பகுதி. தற்போது மார்க்கெட்டை புதுப்பிக்கும் பணி நடைபெற உள்ளதால் இங்கு கடை வைத்திருப்பவர்களுக்கு மாற்று இடத்தில் ஒரு மாத காலத்திற்கு இடம் ஒதுக்கப்பட்டு பணிகள் முடிவடைந்த பிறகு மீண்டும் அவர்களுக்கான கடைகள் வழங்கப்படும் . 

நீட் தேர்வு கடந்த 2017 ஆம் ஆண்டு  அதிமுக அரசு ஒப்புதலின் பேரில், 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. நீட் தேர்வு வந்ததில் இருந்து இந்தாண்டு தான் அதிகளவு மாணவர்கள் நீட் தேர்வை எழுதி உள்ளனர். நீட் தேர்வு எழுதியுள்ள  மாணவர்களுக்கு தொடர்ந்து மன நல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் 564 பேர் அதிக மன உளைச்சலில் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அவர்களுக்கு மனநல மருத்துவர்கள் கொண்டு தொடர்ச்சியாக மன நல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

தேர்வு முடிவுகள் வரும்போது, தேர்ச்சி பெறாத குழந்தைகள் யாரேனும் இருந்தால், அவர்களை மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட மன ஆலோசகர் மூலம் ஆலோசனை வழங்கப்படும். இதுகுறித்து ஆசிரியர்கள் தங்களுக்கு தெரிந்த மாணவர்கள் குறித்த தகவலை 104, 1100 என்ற எண்கள் மூலம் அளிக்க வேண்டும். தேர்ச்சி பெறாத மாணவர்கள் அடுத்து என்ன செய்யலாம் என்ற ஆலோசனையும், மீண்டும் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும். 

அதேபோல் தேர்ச்சி பெறாத மாணவர்களின் பெற்றோர்கள் குழந்தைகளை திட்டுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட கூடாது. தேர்வு என்பது எப்போது வேண்டுமானாலும் எழுதலாம். நீட் தேர்வு ரத்து செய்வது தொடர்பாக தொடர்ந்து மத்திய அரசிடம் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. நேற்று கூட மத்திய அரசு சந்தித்தபோது இது குறித்து கடிதம் வழங்கியிருக்கிறோம். அதிகம் பேர் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி இருக்கிறார்கள் என்பதற்காக அவர்கள் நீட் தேர்வை ஆதரிக்கிறார்கள் என்று அர்த்தம் இல்லை. 

நீட் தேர்வு முடிவுகள் வந்த பிறகு விரைவில் மருத்துவ கலந்தாய்வு நடைபெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். தேர்ச்சி பெற்றதற்கான இட ஒதுக்கீடு தொடர்பாக நீட் தேர்வு முடிவுகள் வந்த பிறகு முடிவெடுக்கப்படும். சித்தா பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான கடிதம் நாளையோ நாளை மறுநாளோ கடிதம் ஆளுநருக்கு அனுப்பப்படும். எதிர்காலத்தில் பல்வேறு மாவட்டங்களில்  செவிலியர் பயிற்சி கல்லூரிகள் அமைப்பதற்கான கடிதத்தை மத்திய அரசிடம் வழங்கி இருக்கிறோம். அதுமட்டுமின்றி தமிழகத்தில் ராணிப்பேட்டை திருப்பத்தூர் தென்காசி மயிலாடுதுறை பெரம்பலூர் உள்ளிட்ட ஆறு இடங்களில் மருத்துவக் கல்லூரிகள் வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்திருக்கிறோம். 

உக்ரைனில் இருந்து வந்த 1890 மாணவர்கள் இங்கேயே படிப்பது குறித்த கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான வழக்கு செப்டம்பர் 2ம் வாரத்தில் வர உள்ளது. நல்ல தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கிறோம்” எனக் கூறியுள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.