வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: அவதூறு வழக்கு தொடர டில்லி கவர்னர் சக்சேனா அனுப்பிய நோட்டீசை கிழித்தெறிந்த ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங், சக்சேனா ஊழல்வாதி, திருடன் என விமர்சித்துள்ளார்.
டில்லியில், துணை நிலை கவர்னராக சக்சேனா பதவி வகிக்கிறார். கடந்த 2016ல், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் மதிப்பு இழப்பு செய்யப்பட்டபோது, காதி மற்றும் கிராமப்புற தொழில் கமிஷன் தலைவராக இருந்த சக்சேனா, 1,400 கோடி ரூபாய் பணத்தை மாற்றியுள்ளார் என ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களான, ராஜ்யசபா எம்.பி., சஞ்சய் சிங், அடிஷி மற்றும் சவுரப் பரத்வாஜ் உள்ளிட்டோர் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுக்கு கவர்னர் சக்சேனா அனுப்பியுள்ள நோட்டீசில், ‘சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி வெளியிட்டுள்ள அவதூறு குற்றச்சாட்டுகளை 48 மணி நேரத்துக்குள் நீக்கி விட்டு, மன்னிப்பு கேட்க வேண்டும். தவறும் பட்சத்தில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என கூறியுள்ளார்.
இந்த நோட்டீஸ் தொடர்பாக சஞ்சய் சிங் நிருபர்களிடம் கூறியதாவது: உண்மையை பேசுவதற்கு அரசியல்சாசனம் எனக்கு உரிமை கொடுத்துள்ளது. ராஜ்யசபா எம்.பி., என்ற முறையில், உண்மையை பேசுவதற்கு எனக்கு உரிமை உள்ளது. ஊழல்வாதி, திருடர் அனுப்பிய நோட்டீசை கண்டு பணிந்து போக மாட்டேன். இந்த நோட்டீசை கிழத்தெறிவேன். 10 முறை அனுப்பினாலும் கிழித்தெறிவேன் எனக்கூறி அதனை கிழித்து எறிந்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement