உத்தரப்பிரதேச மாநிலம், பதோஹி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஏழு வயது பட்டியலின மாணவனை பள்ளியின் ஆசிரியர் தாக்கி, சிறுவனின் தலையைத் தரையில் தேய்த்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பதோஹி மாவட்டத்தின், கியோரௌனா பகுதியில் உள்ள கங்காபூர் தாலியா கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி அமைந்திருக்கிறது. இந்தப் பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கும் பட்டியலின சிறுவன், பள்ளி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது, அந்த வழியே கடந்து போன பள்ளியின் ஆசிரியர் ஒருவர் அந்த சிறுவனைக் கொடூரமாக அடித்து, சிறுவனின் தலையைத் தரையில் தேய்த்திருக்கிறார். ஆசிரியரின் இந்தத் தாக்குதலால் சிறுவனின் வலது கண் பகுதியில் கடுமையான காயம் ஏற்பட்டிருக்கிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய கொய்ராவுனா காவல் நிலைய அதிகாரி ஜெய்பிரகாஷ் யாதவ், “காயமடைந்த மாணவனை மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறோம். குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியரிடம் இந்தத் தாக்குதல் குறித்தான விளக்கம் கேட்டிருக்கிறோம். இந்த விவகாரம் குறித்து சிறுவனின் மாமா புகார் அளித்திருக்கிறார். அதனடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக உதவி அடிப்படைக் கல்வி அலுவலர் ஃபர்ஹா ரைஸ் கூறுகையில், “இந்தச் சம்பவம் குறித்து கல்வித் துறை கவனத்தில் எடுத்திருக்கிறது. இது குறித்து ஆசிரியருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டிருக்கிறது. இந்த விஷயத்தை நானே விசாரித்து வருகிறேன். குற்றம்சாட்டப்பட்டவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என விளக்கமளித்திருக்கிறார்.