லண்டன் :பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று முறைப்படி தன் பதவியை ராஜினாமா செய்தார். பிரிட்டன் ராணியைச் சந்தித்து தன் ராஜினாமா கடிதத்தை அவர் வழங்கினார். இதைத் தொடர்ந்து வெளியுறவுத் துறை அமைச்சர் லிஸ் டிரஸ் பிரதமராக பதவியேற்றார்.ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன், கொரோனா வைரஸ் பரவலின்போது, ஊரடங்கு உத்தரவை மீறி மது விருந்து அளித்தது உள்ளிட்ட பல சர்ச்சைகளில் சிக்கினார். அமைச்சரவை மற்றும் சொந்தக் கட்சியில் கொடுக்கப்பட்ட நெருக்கடியை அடுத்து, கடந்த, ஜூலையில், அவர் தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
பிரிட்டனில் ஆளும் கட்சியின் தலைவராக இருப்பவரே பிரதமராக இருக்க முடியும். இதன்படி ஆளும் பழமைவாத கட்சியின் தலைவரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடந்தது.இதில், முன்னாள் நிதி அமைச்சரான இந்திய வம்சாவளி ரிஷி சுனக்கை வென்று, கட்சியின் தலைவராக, வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.இதையடுத்து, போரிஸ் ஜான்சன் பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தை நேற்று சந்தித்து தன் பதவியை முறைப்படி ராஜினாமா செய்தார்.
பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து புறப்படுவதற்கு முன், போரிஸ் ஜான்சன் பேசியதாவது:என்னுடைய பதவிக்காலத்தில், ‘பிரெக்சிட்’ எனப்படும் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியது, கொரோனா பரவலை சிறப்பாக கையாண்டது, கொரோனா தடுப்பூசி வழங்குவது என, பல முக்கிய மைல்கல்களை எட்டினேன்.தற்போது நாடு உள்ள நிலையில், அரசியலை ஒதுக்கி வைத்து, பிரதமராக பதவியேற்க உள்ள லிஸ் டிரசுக்கு அனைவரும் முழு ஆதரவையும் அளிக்க வேண்டும். என்னுடைய ஆதரவு அவருக்கு எப்போதும் இருக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.இதைத் தொடர்ந்து, பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தை சந்தித்தார் லிஸ் டிரஸ். அவரை நாட்டின் மூன்றாவது பெண் பிரதமராக நியமித்தார் ராணி.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement