தேனி : விழுப்புரத்திலிருந்து சைக்கிளில் தேனிக்கு நேற்று வந்த பனையேறி குடும்பத்தினர், பனை நடவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.விழுப்புரம் மாவட்டம் செஞ்சியைச் சேர்ந்த பனையேறி பாண்டியன் (42). இவர் தலைமையில் 3 குழந்தைகள் உட்பட 7 பேர் கொண்ட குழுவினர், பனை நடவு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழுப்புரத்தில் இருந்து தேனி நோக்கி சைக்கிள்களில் குடும்பத்துடன் கடந்த ஆகஸ்ட் மாதம் புறப்பட்டனர். நேற்று காலை தேனி புதிய பேருந்து நிலையம் பகுதிக்கு வந்தனர்.
இதுகுறித்து பாண்டியன் கூறும்போது: விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பெருமாள், தர்மபுரியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் , திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் பாரதி மற்றும் எங்கள் குழந்தைகள் வீனஸ், செம்மொழி, அணி நிலா ஆகியோர் சைக்கிள் பயணத்தை துவக்கினோம். இந்த பயணத்தில் ஆறாம் திணையான பனை மரம் குறித்தும், பனை உணவுகளின் இன்றைய தேவை குறித்தும் மக்களுக்கு உணர்த்த வேண்டும்.
கடந்த 85 ஆண்டு காலமாக தமிழர்களின் உணவான பனங்கல்லை தடை செய்துள்ளார்கள். அந்த தடையை நீக்கி ஊட்டச்சத்தும் மருத்துவ குணம் அடங்கிய, நமது பானமான பனங்கல்லின் தடையை நீக்க வேண்டும். வருடம் முழுவதும் பனையில் இருந்து பொருளாதாரத்தை ஈட்டக்கூடிய அத்தனை தகுதிகளும் பனைக்கும், பனை தொழிலுக்கும் உண்டு, என்றார்.