பாடல்களுடான ஞாபகங்கள்! | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

அந்தப் பாடல் வெளிவந்த போது எத்தனை தடவை தொடர்ந்து கேட்டு இருக்கேன் தெரியுமா? என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் அந்த பாடல் மட்டும் மனதிற்குள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும். அந்த சமயத்தில் அந்த பாடல் மேல் அவ்வளவு பைத்தியமாக இருந்தேன் ‌‌ இப்படி சொல்பவர்கள் தான் நம்மில் பலரும்.

சில பாடல்களைக் கேட்கும்போது நம்மை அறியாமல் நம் வாய் முணுமுணுத்துக் கொண்டே வேலைகள் செய்யும் . நாம் ஏதோ ஒரு யோசனையில் சென்று கொண்டிருப்போம். அப்போது வழியில் தென்படும் டீக்கடையிலோ, நம்மை கடந்து செல்லும் ஆட்டோவின் ஸ்பீக்கரிலோ, அல்லது நம் அருகில் நின்று கொண்டிருக்கும் நபரின் அலைபேசி வாயிலாகவோ.. நம் மனதிற்கு பிடித்த பாடல்கள் ஒலிக்கும். ஒரு வினாடி. ஏதேதோ நினைவுகள். அழகழகாய் வந்து போகும். (சில நினைவுகள் என்றுமே அழகானவை). அதுவும் பாடல்களுடனான நினைவுகள் அழகோ அழகு. பாடல்களுடான ஞாபகத்தை கிளறவே… இந்த பதிவு…

1977ஆம் ஆண்டு துரை அவர்களின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த அருமையான திரைப்படம் ‘சதுரங்கம்’

” மதனோற்சவம் ரதியோடு தான்

ரதிதேவியோ பதியோடு தான்

உயிரோவியம் உனக்காகத்தான்

உடல் வண்ணமே அதற்காகத்தான்” என்று இளமை ததும்ப வாலி அவர்கள் எழுதிய பாடலை வி. குமார் அவர்கள் தன் கிடார் இசையின் மூலம் மெருகேற்றி இருப்பார் .ஆரம்பத்தில் வரும் அற்புதமான இசை கோர்வையை எஸ்பிபி அவர்கள் அழகாய், இனிமையாய் ,எளிமையாய் பாடி இருப்பார். கேட்க கேட்க திகட்டாத பாடல் இது.

Representational Image

“மீனாடும் கண்ணில் விழுந்து நான் ஆடவோ.. தேனாடும் செவ்விதழ் தன்னில் நீராடவோ” ..

இசை அமிர்தம் இந்தப் பாடல்.

.”வசந்த கால கோலங்கள்

வானில் விழுந்த கோடுகள்

கலைந்திடும் கனவுகள்

கண்ணீர் சிந்தும் நினைவுகள்..”

‘தியாகம்’ திரைப்படத்தில் இடம் பெற்ற அருமையான பாடல். சோகத்தையும் சுகமாக்கும் வித்தை இசைஞானி மட்டுமே அறிந்த ஒன்று. ஜானகி அம்மாவின் குரல், கவியரசரின் வரிகள், இசைஞானியின் இசை லட்சுமியின் முகபாவம், இப்படி எல்லாம் சேர்ந்து இந்த பாடலை ஹிட் ஆக்கியது. பாடலின் இறுதியில் சிவாஜி கம்பீரமாக நடந்து வருவார். அருமையாக இருக்கும்.

“அலையில் ஆடும் காகிதம்… அதில் என்ன காவியம்”…

நிலவு தூங்கும் நேரத்தில் இந்த பாடலைக் கேட்டுப் பாருங்கள். இனம் புரியாத உணர்வுகளை உள்ளத்தில் தட்டி எழுப்பும் .

இளையராஜா என்னும்இசை மாமேதையின் இசையில் உருவான காலத்தால் அழிக்க முடியாத பாடல்களில் ஒன்று..

“என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்

ஏன் கேட்கிறது? ஏன் வாட்டுது ?

ஆனால் அதுவும் ஆனந்தம் “என்ற பாடல் ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி” படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலில் முழுக்க முழுக்க தபேலாவை விளையாட வைத்திருப்பார் இசை ஞானி. இந்த பாடல் செவியில் ஜீவித்து, ஜீவனில் லயித்து உணர்வுகளை வருடும். பாடலின் இடையே,” ஏன் நிறுத்திட்டீங்க”? அப்படின்னு கதாநாயகி கேட்கிறப்போ உங்களுக்கு ஆட்சேபணை இல்லன்னா.. இல்ல …சொல்லி சிவச்சந்திரன் திரும்பி பார்க்கும் பொழுது ஒரு நிசப்தம் நிலவும்.( அது வேற லெவல் )அது இசைஞானிக்கு உரித்தானது. படைத்தவன் கடவுள் என்றால் இசை ஞானியும் கடவுள் தான். இசையைப் படைப்பதினால்.! இந்தப் பாடலை கேட்கிறப்ப நம்மால் அதனுடன் பாடாமல் இருக்க முடியுமா என்ன?

1980 ஆம் ஆண்டு வெளிவந்த ‘தூரத்து இடி முழக்கம்’ படத்தில் இடம்பெற்ற

“உள்ளமெல்லாம் தள்ளாடுதே

உள்ளுக்குள்ள ஏதேதோ எண்ணங்கள் போராடுதே

துள்ளும் அலைத் தொட்டு என் காலை முத்தமிட்டு வெள்ளி நிலா ஊஞ்சலில் தாலாட்டுதே..’ “

கேப்டனின் முதல் படம் இது. சலீல் சவுத்ரியின் இசையில் கு.மா. பாலசுப்ரமணியம் எழுதிய வழக்கமான காதல் பாடல் தான் ஆனால் ஒழுக்கமான வர்ணிப்பு அழகாய் மிளிரும் பாடல். பாடலை கே ஜே ஜேசுதாஸ் தன் மென்மையான குரலால் அழகாய் பாடியிருப்பார். இந்த பாடலைக் கேட்கும் போது மனதில் உள்ள சுமைகளை இறக்கி வைத்தது போல் இருக்கும். மனதை துள்ளி குதிக்க வைக்கும் இந்த பாடலை அதனுடனேயே பாடாமல் யாராவது இருப்பார்களா? (மனதை தொட்டு சொல்லுங்கள்)

“அட யாரோ பின் பாட்டு பாட

அடதாளம் நான் பார்த்து போட

ஹோய் நையாண்டி மேளம் நான் கொட்டவா

நான் பார்த்த பூவே நீ ஆடவா

மானே மயக்கம் தானே” 1981 ஆம் ஆண்டுவெளி வந்த ‘ரயில் பயணங்களில்” இடம்பெற்ற அருமையான துளாளலிசைப் பாடலிது. டிஆரின் மயக்கும் இசை ,அழகான பாடல் வரிகள் ,எஸ்பிபி அவர்களின் கிறங்கடிக்கும் குரலில்… இன்றைக்கும் எழுந்து ஆடவைக்கும்!

நம்மை பாட வைக்கும்!

” ஓரவிழியிலே சேர துடிச்சேன்

சேரன் வில்லிலே புருவம் அமைச்சே “என்ன ஒரு அழகான தமிழ். டி.ஆரால் மட்டுமே இப்படி எல்லாம் எழுத முடியும் . அதே படத்தில் இன்னொரு பாடல்

“வசந்தம் பாடி வர

வைகை ஓடி வர இளமை கூடி வர

இனிமை தேடி வர ஆராதனை செய்யட்டுமா நீரோடையில் நீந்தட்டுமா…”41 வருடங்கள் கழிந்(த்)தும் இந்தப் பாடல் இப்போது கேட்டாலும் புத்தம் புதிது போல் இருப்பதே இதனுடைய தனிச்சிறப்பு . காட்சிகளின் நடுவே வரும் மகிழ்ச்சி மற்றும் சோக நிலைகளில் கூட பின்னணி இசையில் மெலிதான பெண் வாய்ஸில் அழகாக ஹம்மிங் போட்டிருப்பார். இந்தப் பாடலை எஸ்பிபி அவர்கள் பாடுவதைக் கேட்கும் போது குலோப் ஜாமுனுடன் வெண்ணிலா ஐஸ்கிரீம் சேர்ந்து சாப்பிடும் போதுவரும்சந்தோஷம் வரும்.

தூரத்து இடி முழக்கம்

“நெஞ்சம் பாடும் புதிய ராகம்

தாளம் உன்னைத் தேடுதே”

டி ஆர் இசையில்’ நெஞ்சில் ஒரு ராகம்’ படத்தில் இடம்பெற்ற அருமையான துள்ளல் இசை பாடல்..ஹம்மிங் மட்டுமே பாடலுக்கு இனிமைசேர்க்கும் பல பாடல்களுக்கு மத்தியில் இந்தப் பாடலுக்கு ஹம்மிங் தந்த எஸ்பிபி அவர்களைபடத்தில் தியாகராஜன் ட்ரம்ஸ் வாசிப்பின் மூலம் உச்சத்துக்கு கொண்டு சென்றிருப்பார்.

‘உன் குரல் கேட்கவே

குயில் கூட்டங்கள் தலை குனிந்தன

தனைமறந்தன”என்ற பாடல் வரிகளில் டிரம்ஸ் துள்ளி குதிக்கும். இது பாடல் இல்லை… குட்டி கலாட்டா. இந்தப் பாடலை கேட்கும் ஒவ்வொரு முறையும் நம்மை அறியாமல் நம் கால்கள் தாளமிடும் .வாய் பாட்டை முணுமுணுக்கும்.

“தோள் மீது தாலாட்டு

என் பச்சைக்கிளி நீ தூங்கு

தாய் போல தாலாட்ட..

என் தங்கமே நீ தூங்கு

நிலவ கேட்டா புடிச்சு தருவேன் மாமன்

உலக கேட்டா வாங்கி தருவேன் மாமன்

என்ன ஒரு அழகான தாலாட்டு. உயிரும் உருகும்.

‘என் தங்கை கல்யாணி படத்தில் டி. ஆரின் இந்தப் பாடல் அண்ணனின் பேச்சை மதிக்காமல் காதலித்து திருமணம் செய்து கஷ்டப்படும் ஒவ்வொரு தங்கைக்கும் புரியும். எஸ்பிபி அவர்கள் பாடலின் சோகத்தை உள்வாங்கிக் கொண்டு அருமையாக பாடி இருப்பார்.

” மண்ணுக் குதிரை அவன நம்பி வாழ்க்கை என்னும் ஆற்றில் இறங்க அம்மா நினைச்சாடா.. மாமன் தடுத்தேன்டா..

வார்த்தை மீறி போனா பாரு மனசு பொறுக்கலடா..

என் மானம் தடுக்குதடா..’’

இந்த வரிகளை கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் நம்மை அறியாமல் கண்களில் நீர் வழிந்து ஓடும் .அதுதான் டி ஆர் அதுதான் எஸ் பி பி. எத்தனை முறை கேட்டாலும் இனிக்கும் சோக கவிதை இந்தப் பாடல்.

“ரெண்டு கன்னம் சந்தன கிண்ணம்

தொட்டுக்கொள்ள ஆசைகள் துள்ளும்

பூவை கையில் பூவை அள்ளிக் கொடுத்த பின்னும் தொட்டு தந்த கையில் மணம் வீசுது இன்னும்…”

இரு நல்லவர்கள் காதலிக்கும் போது காதல் எவ்வளவு உயர்வானதாக இருக்கும் என்பதற்கு சரியான எடுத்துக்காட்டு இந்த பாடல் .

டி.ஆர்

‘சிவப்பு மல்லி’ திரைப்படத்தில் கே ஜே ஜேசுதாஸ் அவர்களும் பி சுசீலா அம்மாவும் தேனினும் இனிமையாய் பாடிய பாடல் “எடுத்துக் கொடுக்கையில் இரு விரல் போது (ம்) நகங்கள் உரசி கொண்டால் அனல் உருவாகும்’இடதுசாரி கொள்கையைப் பற்றிய படத்தில் இதைவிட மென்மையாக காதலைப் பற்றி சொல்ல முடியுமா என்ன??

“தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ.. கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ…தேன் சிந்தும் நேரம்

நான் பாடும் ராகம் காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ” … இசைஞானி இசையில் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தில் இடம்பெற்ற அருமையான பாடல் இது எஸ்பிபி அவர்கள் அவ்வளவு அழகாக பாடி இருப்பார்.( கூட நம்மையும் பாட அழைப்பார் அதுதான் இந்த பாடலின் வெற்றிக்கு காரணம்..) அவரின் ல கர ,ள கர உச்சரிப்பு பிரமாதமாக இருக்கும் தமிழ் உச்சரிப்பில் வித்தகர் அவர்.

ரோஜாவை தாலாட்டும் தென்றல்… உன் மேகம் நம் பந்தல் உன் கூந்தல் என் ஊஞ்சல் உன் வார்த்தை சங்கீதங்கள்… இப்படி ரோஜாவுக்கு தாலாட்டு பாடல் இசைஞானிகள் மட்டுமே முடியும்

1982 ஆம் ஆண்டு வெளிவந்த “நினைவெல்லாம் நித்யா’திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது. வைரமுத்து அவர்களின் வைர வரிகளில் பட்டையைக் கிளப்பிய பாடல் . வரிக்கு வரி வைரமுத்து சாரின் வர்ணிப்பு ,அதற்கு இசைஞானியின் தாலாட்டு.. என பாடல் நம்மை எங்கெங்கோ அழைத்துச் செல்லும். ‘வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்.. இலையுதிர் காலம் முழுவதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்.’ எவ்வளவு அழகான வார்த்தை பிரயோகிப்பு பாருங்கள்.

‘இலைகளில் காதல் கடிதம்

வண்டு எழுதும் பூஞ்சோலை

விரல்களில் மேனி முழுதும்

இளமை வரையும் ஓர் கவிதை” இப்படி எல்லாம் இனி ஒருவரால் எழுத முடியுமா? சாத்தியமா?? இரவின் நிசப்பத்தில் இந்த பாடலைக் கேட்கும் போது நம்மை அறியாமல் நம் வாய் பாடலைப் பாடும் என்பதில் சந்தேகமே இல்லை.

1987 ஆம் ஆண்டு வெளிவந்த ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற

“மதுர மரிக்கொழுந்து வாசம்

என் ராசாத்தி உன்னுடைய நேசம்

மானோட பார்வை மீனோட சேரும்

மாறாமல் என்னை தொட்டு பேசும்

இது மறையாத என்னுடைய பாசம்”… இந்தப் பாடலை இனிமையாக பாடிய மனோவின் குரலா அல்லது இசைஞானியின் அருமையான இசையா அல்லது கங்கை அமரன் அருமையான வரிகளா எது என்னை கவர்ந்தது இன்று வரை விடை தெரியவில்லை ஆனால் இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் இதனுடைய பாடத்தோன்றும் ஆனந்தம் தரும் பாடல் என்றால் இந்த பாடல் மட்டுமே ஹம்மிங்கலேயே வேறு உலகத்துக்கு நம்மை கொண்டு சென்று விடுவார் இசை ஞானி .

“நீதானே என்னுடைய ராகம்

என் நெஞ்சமெல்லாம் உன்னுடைய தாளம் மண்வாசனை கலந்த காலத்தால் அழியாத பாடல் இது ஸ்பீக்கர் பாக்ஸில் சத்தமாக வைத்து கூடவே நான் பாடியதெல்லாம் கண்முன்னே நிழலாடுகிறது…

`எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தில்…

1990 ஆண்டு வெளிவந்த என் உயிர் தோழன் திரைப்படத்திலிருந்து கங்கை அமரன் எழுதிய பாடலுக்கு இளையராஜா இசையமைக்க மலேசியா வாசுதேவன் அருமையாக ஒரு பாடலை பாடியிருப்பார்.

ஹே… ராசாத்தி .

ரோசாப்பூ வா வா வா

அடியே சீமாட்டி பூச்சூட்டி

வா வா வா

தேவதையே திருமகளே.

மாங்கனியே மணமகளே

மாலை சூடும் குணமகளே

வா வாவா”…

நேர்மறையான விமர்சனங்கள் பெற்ற அருமையான படம் ‘என் உயிர் தோழன்’ நேற்று இன்று நாளை என்று அரசியல் சூழலை பட்டவர்த்தனமாக சொல்லியது இன்றைய புதுப்பேட்டை மெட்ராஸ் படங்களுக்கெல்லாம் என்னுயிர் தோழன் தான் அகராதி . என்று சொல்லும் அளவுக்கு இந்தக் கால அரசியல் துரோகங்களை 32 வருடங்களுக்கு முன்பே சுட்டிக்காட்டிய நல்ல படத்தில் இடம்பெற்ற அருமையான பாடல் இது..

” ஆகாயம் பூப்பந்தல்

அங்கே பொன்னூஞ்சல்

நீயாட அதில் நானாட

நேரம் வந்தாட”

என்ற வரிகளை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது. இளையராஜா அவர்கள் இந்தப் பாடலை மலேசியா வாசுதேவனை இருமுறை பாடவைத்து அதை ஒன்றாக கலந்து இந்த பாடலை வெளியிட்டு இருப்பார். கேட்கும்போது ‘இரண்டு டிராக்குகள் ‘ஒலிப்பது தெரியும் (கூர்ந்து கவனித்தால்) பாடகரின் மெல்லிய எதிரொலியையும் பாட்டுடன் இணைத்து இருப்பார். இது இசைஞானியின் பல புதுமைகளில் ஒன்று .இதை இரண்டு முறையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி பாடி அசத்தியிருப்பார் மலேசியா வாசுதேவன். அதிலும் குறிப்பாக பாடலின் இரு இடை இசை ஆரம்பிக்கும் முன் சில நொடிகள் மௌனம் வரும் .அந்த மௌனத்தை ஒளிப்பதிவின் மூலம் ஒளிப்பதிவார் நம்மிடம் கடத்திவிடும் அழகே அழகு.

“கண்கள் இமை ஓடும்போதும் உனதன்பு எனது அன்பை தேடும் நெஞ்சம் இரண்டான போதும் நம் எண்ணம் ஒன்றாகத் தூங்கும் தூர இருந்தும் அருகில் இருப்போம்

தனித்து இருந்தும் இணைந்து இருப்போம்” கங்கை அமரனின் வரிகள் நம்மை அந்த சூழலுக்குள்ளே அழைத்துச் செல்லும் .பாடலைக் கேட்டு அதனுடனையே பாடியது எல்லாம் கண்முன்னே காட்சிகளாய்…

உங்களின் மனம் கவர்ந்த பாடல்களை (நீங்கள் முணுமுணுத்த பாடல்களை )மீண்டும் நினைவு படுத்தும்(சிறு) முயற்சியின் விளைவே இந்த பதிவு.. மனம் கவர்ந்த பாடல்களை வாய்விட்டு பாடுங்கள் … சோகங்களும் சுகமாகும்..

வாழ்வின் இக்கட்டான தருணங்களில்

நம்மால் ‘முடியும்’ ‘என்ற தன்னம்பிக்கை எழும்..

என்றென்றும் அன்புடன்

ஆதிரை வேணுகோபால்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.