பின் சீட்டில் இருந்தாலும் கார் சீட் பெல்ட் போடுங்க; இல்லாவிட்டால் ரூ.1000 ஃபைன் தாங்க!

புதுடெல்லி: காரின் பின் இருக்கையில் அமர்பவர்களும் சீட் பெல்ட் அணிவது கட்டாயம். அவ்வாறு அணியாதவர்களுக்கு விரைவில் ரூ.1000 அபராதம் வசூலிக்கும் திட்டம் அமலுக்கு வரும் என்று மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிறு அன்று மும்பையில் கார் விபத்தில் டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி உயிரிழந்தார். சைரஸ் மிஸ்திரி ஞாயிற்றுக்கிழமை அன்று அகமதாபாத்திலிருந்து மும்பைக்கு பென்ஸ் காரில் திரும்பிக் கொண்டிருந்தார். முன் இருக்கையில், மும்பையைச் சேர்ந்த மருத்துவர் அனாஜிட்டா பண்டோலும் அவரது கணவர் டேரியஸ் பண்டோலும் அமர்ந்திருந்தனர். பின் இருக்கையில் சைரஸ் மிஸ்திரியும் டேரியஸ் பண்டோலின் சகோதரர் ஜெஹாங்கிர் பண்டோலும் அமர்ந்திருந்தனர். மதியம் 3 மணி அளவில் மகாராஷ்டிர மாநிலம் பால்கரில் உள்ள சூர்யா நதி மேம்பாலத்தில் அவர்களது கார் அதிவேகமாக சென்ற நிலையில், மற்றொரு காரை இடப்புறமாக முந்த முயன்றபோது சாலைத் தடுப்புச் சுவற்றில் மோதியது.பின் இருக்கையில் இருந்த சைரஸ் மிஸ்திரியும், ஜெஹாங்கிர் பண்டோலும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்கள் இருவரும் சீட் பெல்ட் அணியவில்லை என்பது தெரியவந்தது.

இந்நிலையில் ஆங்கில தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கட்கரி, “காரின் பின் இருக்கையில் அமர்பவர்களும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பது ஏற்கெனவே போக்குவரத்து விதிமுறையில் உள்ளது. ஆனால் மக்கள் யாரும் அதனைப் பின்பற்றுவதில்லை. இனிமேல் முன் இருக்கையில் உள்ளவர்கள் சீட் பெல்ட் அணியாவிட்டால் சைரன் ஒலிப்பதுபோல் பின் இருக்கையில் உள்ளவர்களும் சீட் பெல்ட் அணியாவிட்டால் சைரன் ஒலிக்கும் வகையில் கார்கள் வடிவமைக்கப்படும். மீறி சீட் பெல்ட் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அபராதம் மூலம் வருமானம் பார்ப்பது நோக்கமல்ல. 2024ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் சாலை விபத்துகளை இப்போது உள்ளதில் இருந்து 50 சதவீதம் அளவிற்குக் குறைக்க வேண்டும் என்பதே இலக்கு. காரில் பின் இருக்கையில் சீட் பெல்ட் அணியாதவர்களிடம் ரூ.1000 வரை அபராதம் வசூலிக்கப்படும். போக்குவரத்து விதிகளில் மாநில அரசுகளுக்கும் கட்டுப்பாடு இருந்தாலும் கூட இந்த அபராதம் விதிப்பில் சிக்கல் ஏதும் இருக்காது. மக்கள் யாரும் போக்குவரத்துத் துறை அதிகாரிகளை ஏமாற்றலாம் என்று எண்ணிவிட வேண்டாம். பெரும்பாலான இடங்களில் கேமரா இருக்கிறது.

அதேபோல், பின் இருக்கைகளுக்கும் ஏர் பேக் அமைப்பது குறித்த பரிசீலனைகள் நடைபெறுகின்றன. அவ்வாறு பின் இருக்கைகளுக்கும் ஏர் பேக் பொருத்துவது கார் விலையை அதிகரிக்கும் என்றாலும் கூட மனித உயிர்கள் விலை மதிப்பற்றது. இப்போதைக்கு ஒரு ஏர் பேக்கின் விலை ரூ.1000 என்றளவில் உள்ளது. ஒரு காரில் 6 ஏர் பேக்குகள் அமைத்தால் அதற்கு ரூ.6000 செலவாகும். ஆனால் அதிகளவில் ஏர் பேக் உற்பத்தி செய்யப்படும் இந்த விலை சற்று குறையும். இப்போதைக்கு முன் இருக்கைகளில் தான் ஏர் பேக் கட்டாயம் என்றுள்ளது. ஆனால் 2022 ஜனவரி முதலே அரசாங்கம் 8 பேர் அமரும் காரில் முன் இருக்கைகள் உட்பட மொத்தம் 6 ஏர் பேக் அமைக்குமாறு வலியுறுத்தியுள்ளது. சாலை பாதுகாப்பு குறித்து பிரபலங்களை வைத்து பிரச்சாரங்கள் செய்து வருகிறோம். ஊடகங்களும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சைரஸ் மிஸ்த்ரி மறைவுக்காக வேதனைப்படுகிறேன். அதேவேளையில் நடந்த அந்த துயரத்தில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.