புதுடெல்லி: பிரதமர் பதவியின் மீது தனக்கு எந்தவித ஆசையும் இல்லை என பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் திட்டவட்டமாக தெரிவித்தார்.
புதுடெல்லியில் இடதுசாரி கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரியை நேற்று சந்தித்து பேச்சு நடத்திய நிதிஷ் குமார் மேலும் கூறியது:
எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப் பதற்காகவே டெல்லி வந்துள்ளேன். 2024-ல் பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவதற் கான ஆதரவை திரட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவே டெல்லி வந்துள்ளதாக கூறப்படுவது தவறான செய்தியாகும்.
பிரதமர் பதவிக்கு உரிமை கோரும் எண்ணம் உண்மையில் எனக்கு இல்லை. அந்தப் பதவியின் மீது எனக்கு ஆசையும் கிடையாது. வரும் தேர்தலில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதுதான் எனது முதன்மையான விருப்பம். இளம் வயது முதலே சிபிஐ மார்க்சிஸ்ட் கட்சியுடன் இணைந்து பயணித்துள்ளேன். அந்த வகையில், டெல்லி வருகையில் இடது சாரி கட்சி தலைவர்களை சந்தித்துப் பேசுவது வழக்கம்.
காங்கிரஸ், அனைத்து இடதுசாரி அமைப்புகள், பல்வேறு மாநிலங்களில் உள்ள பிராந்திய கட்சிகள் ஆகியவற்றை ஒன்றிணைப்பதில் முழு கவனம் செலுத்தி வருகிறேன். இவ்வாறு நிதிஷ் குமார் தெரிவித்தார்.
இதனிடையே, டெல்லியில் சுற்றுப் பயணத்தின் இரண்டாவது நாளான நேற்று மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலையும் நிதிஷ் குமார் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவும் உடன் இருந்தார்.
அண்மையில் பிஹார் மாநிலத் தில் பாஜக கூட்டணியிலிலிருந்து வெளியேறிய நிதிஷ் குமார் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியுடன் இணைந்து புதிதாக மீண்டும் ஆட்சி அமைத்தார். பிஹார் முதல்வராக மீண்டும் பதவியேற்றுக் கொண்டநிதிஷ் குமார் துணை முதல்வர்பதவியை தேஜஸ்வி யாதவுக்குவழங்கினார் என்பது குறிப்பிடத் தக்கது.