மதுரை: பிளாஸ்டிக் தடை அமலாவதை முறையாக கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது என ஐகோர்ட் கிளையில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மதுரை மேற்கு யாகப்பா நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் இருளாண்டி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழகத்தில் பிளாஸ்டிக் தடையை முறையாக அமல்படுத்த தேவையான குழு அமைக்கவும், பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக தடை செய்தும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாஸ்கரன், அரசு வக்கீல் நிர்மல்குமார் ஆஜராகி, ‘‘பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கான தடையை முறையாக அமல்படுத்தவும், கண்காணிக்கவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தலைமை செயலாளர் தலைமையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய செயலர் உள்ளிட்ட 19 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டம், மாநகராட்சி மற்றும் ஒன்றிய அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது’’ என்றனர். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தொடர்ந்து நடவடிக்கை எடுக்க கூறி மனுவை முடித்து வைத்தனர்.