திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை சேர்ந்த பார்த்திபனும், சென்னை அம்பத்தூரை சேர்ந்த தமிழ் என்பவரும் புலிக் குட்டி விற்பனை செய்ய முயன்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வாட்ஸ்ஆப் ஸ்டேட்டசில் புலிக் குட்டி விற்பனைக்கு உள்ளது என்றும், அதன் விலை ரூ.25 லட்சம் என்றும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தகவலறிந்த தலைமை வனத்துறையினர், வேலூர் மாவட்ட வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதன்படி வேலூர் வனத்துறையினர், பார்திபனை 1972 வன உயிரின பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தனர். மேலும், அவரிடம் விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
விசாரணையின் போது, சென்னை அம்பத்தூரை சேர்ந்த தமிழ் என்பவருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக தெரிய வந்ததது. இதனையடுத்து, சென்னை வனத்துறையினர் தமிழ் என்பவரை கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேற்கொண்டு நடத்திய விசாரணையில், பார்த்திபன் மற்றும் தமிழ் ஆகிய இருவருக்கும் தேசிய மற்றும் சர்வதேச அளவில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து சென்னை மற்றும் வேலூர் வனத்துறையினர் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.