நாகை: வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு இன்றிரவு தேர் பவனி நடக்கிறது. இதில் பங்கேற்க ஆலயத்தில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உலகப்புகழ் பெற்றது. இது கீழ்திசை நாடுகளின் லூர்து நகரம் என அழைக்கப்படுகிறது. இங்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு ஆண்டு தோறும் பெருவிழா விமரிசையாக கொண்டாடப்படும்.
இந்தாண்டு பெருவிழா கொடியேற்றம் கடந்த 29ம் தேதி நடந்தது. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் தமிழ், ஆங்கிலம், கொங்கனி, மலையாளம், மராத்தி ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தேர்பவனி இன்றிரவு (7ம் தேதி) 7.30 மணியளவில் தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார் தலைமையில் நடக்கிறது. இந்த பெரிய தேர் பவனியில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் ஆலயத்துக்கு பாத யாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். இதுதவிர வாகனங்களில் வந்து குவிந்து வருகின்றனர்.
இதனால் பேராலயம், கடற்கரை என வேளாங்கண்ணி முழுவதும் பக்தர்கள் தலைகளாகவே காட்சி அளிக்கிறது. பக்தர்கள் வந்து செல்ல வசதியாக சிறப்பு ரயில்கள், பஸ்கள் இயக்கப்படுகிறது. பேராலயம் மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது. சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 8 மணிக்கு விண்மீன் ஆலயத்தில் அன்னையின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.
பின்னர் திருவிழா சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நடக்கிறது. மாலை 6 மணிக்கு அன்னையின் கொடியிறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.
வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவையொட்டி நாளை நாகை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.