பொன்னியின் செல்வன் இசை வெளியீடு கோலாகலம் : திரண்ட திரைநட்சத்திரங்கள்

சரித்திர நாவலான பொன்னியின் செல்வனை இரண்டு பாகங்களாக படமாக இயக்கி உள்ளார் மணிரத்னம். ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்தியதேவனாக கார்த்தி, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக திரிஷா, பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சின்னபழுவேட்டரையராக பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

சுந்தர சோழனாக பிரகாஷ்ராஜ், செம்பியான் மாதேவியாக ஜெயசித்ரா, மதுராந்தகனாக ரகுமான், வானதியாக நேகா துலிபாலா, பூங்குழலியாக ஐஸ்வர்ய லட்சுமி, பெரிய வேளாராக பிரபு, மலையமானாக லால மற்றும் பார்த்திபேந்திர பல்லவனாக விக்ரம் பிரபு மற்றும் ஆழ்வார்கடியன் நம்பியாக ஜெயராம் என ஏகப்பட்ட திரைநட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

பிரம்மாண்ட படமாக உருவாகி உள்ள இந்த படத்தை லைகா நிறுவனத்துடன் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர். செப்., 30ல் பொன்னியின் செல்வன் முதல்பாகம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இன்று படத்தின் பிரமாண்ட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பார் என கூறப்பட்டது. ஆனால் அவர் பங்கேற்கவில்லை. அதேசமயம் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் பங்கேற்கின்றனர் என படக்குழுவினர் அறிவித்தனர். அதன்படி விழா 6 மணிக்கு துவங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் 7:25 மணிக்கு தான் தொடங்கினார்கள்.

விழாவில் மணிரத்னம், ரஜினிகாந்த், கமல்ஹாசன், லைகா சுபாஸ்கரன், விக்ரம், ஏ.ஆர்.ரஹ்மான், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், பிரபு, விக்ரம் பிரபு, பார்த்திபன், நாசர், சித்தார்த், அதிதி ராவ், கிஷோர், ஜெயசித்ரா, சோபிதா துலிபாலா, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ரகுமான், ஜெயராம், காளிதாஸ், ஷங்கர், டிஜி தியாகராஜன், தேனாண்டாள் முரளி, தரணி, மிஷ்கின் உள்ளிட்ட ஏகப்பட்ட திரைநட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். முன்னதாக திரைநட்சத்திரங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியும் நடந்தது.
6 பாடல்கள் என்னென்ன
பொன்னியின் செல்வன் முதல்பாகத்தில் மொத்தம் 6 பாடல்கள் உள்ளன. இவற்றில் பொன்னி நதி மற்றும் சோழா சோழா பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன. மீதமுள்ள நான்கு பாடல்கள் விபரமும் வெளியாகி உள்ளன. அதன்படி ராட்சச மாமனே… சொல்… அலைகடல்… மற்றும் தேவராளன்…. ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. 6 பாடல்களையும் வித்தியாசமான முறையில் இசையமைத்துள்ளார் ரஹ்மான்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.