பில்வாரா: கன்னித்தன்மை சோதனையில் தோல்வியடைந்த மணமகளிடம் ரூ.10 லட்ச ரூபாய் அபராதம் கேட்டதற்கு, பாஜக மகளிர் அணியின் தேசியத் தலைவரும், எம்எல்ஏ-வுமான வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் 24 வயதான பெண் ஒருவருக்கு கடந்த மே 11ம் தேதி திருமணம் நடைபெற்றது. இதையடுத்து மணமகனின் குடும்பத்தினர் வழக்கப்படி திருமணமான பெண்ணுக்கு கன்னித்தன்மை சோதனை எடுப்பது வழக்கமான ஒன்றாகும்.
இதனால் திருமணத்திற்கு பின் அவர்களின் குக்டி மரபின்படி, அப்பெண்ணுக்குக் கன்னித்தன்மை பரிசோதனை நடத்தியுள்ளனர். அவர் அந்தச் சோதனையில், மணமகள் தன்னுடைய கன்னித்தன்மையை இழந்துள்ளார் என்று சோதனையின் முடிவில் தெரிய வந்துள்ளது. இதன்பின்னர் சோதனையில் கன்னித்தன்மையை நிரூபிக்கத் தவறியதால், மாப்பிள்ளை வீட்டார் அந்த பெண்ணை அடித்துத் துன்புறுத்தி விசாரித்துள்ளனர்.
பாலியல் வன்கொடுமை
அப்போது அந்தப் பெண் தன்னுடைய அண்டை வீட்டாரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து சுபாஷ் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதையும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த பிரச்னையை பஞ்சாயத்து உறுப்பினர்களிடம் மாப்பிள்ளை வீட்டார் கொண்டு சென்றுள்ளனர்.

பஞ்சாயத்து உறுப்பினர்கள்
இதனைத்தொடர்ந்து பஞ்சாயத்து உறுப்பினர்கள், கன்னித்தன்மையை இழந்த அந்தப் பெண்ணை புனிதமாக்க புதிதாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர். அந்த உத்தரவில், ரூ.10 லட்சம் அபராதமாகக் கொடுக்க வேண்டும் என பஞ்சாயத்து உறுப்பினர்கள் மணமகளின் குடும்பத்தினரைக் கட்டாயப்படுத்தி உள்ளனர்.

காவல்துறையில் புகார்
அதனைத்தொடர்ந்து, அப்பெண் காவல் நிலையத்தில் தன்னுடைய கணவர், மாமியார், பஞ்சாயத்து உறுப்பினர்கள் மீது புகாரளித்தார். இதன்பின்னர் மணமகன், அவரின் குடும்பத்தினர் மற்றும் பஞ்சாயத்து உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மீது காவல் துறையினர் பல சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வானதி சீனிவாசன் கண்டனம்
இதற்கு பாஜக மகளிர் அணியின் தேசியத் தலைவரும், எம்எல்ஏ-வுமான வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ராஜஸ்தான் முதலமைச்சரின் அணுகுமுறையும், பெண்களுக்கான குற்றங்களில் 50 சதவிகிதம் பொய்யானவை போன்ற அறிக்கைகளும், குற்றவாளிகளுக்கு தைரியத்தை அளித்து வருகிறது. வெட்கக்கேடான இந்த விஷயத்துக்கு அவர் தலைகுனிய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.