போபால்: மாட்டுக்கறி சாப்பிடுவது நல்லது என்று கருத்து கூறியதற்காக பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான ஆலியா பட் ஆகியோர் மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் கோயிலுக்குள் செல்ல பஜ்ரங்தள் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பாலிவுட்டில் பிரபல நடிகராக இருப்பவர் ரன்பீர் கபூர். இவர் பிரபல நடிகை ஆலியா பட்டை கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் ரன்பீர் கபூர் பிரம்மாண்டமான பொருட் செலவில் பிரம்மாஸ்திரா என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.
இதன் ரிலீசுக்காக பாலிவுட் திரையுலமே காத்திருக்கிறது. இந்த நிலையில், ரன்பீர் கபூரும் அவரது மனைவி ஆலியா பட்டும் மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் பிரசித்தி பெற்ற மஹாகலேஷ்வர் கோயிலுக்கு சென்றனர்.
பஜ்ரங்தள்
அப்போது அங்கு திரண்ட பஜ்ரங்தள் அமைப்பினர் ரன்பீர் கபூர் மற்றும் அவரது மனைவி ஆலியா பட் ஆகியோர் கோயிலுக்கு செல்லக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி போலீசாருடன் பஜ்ரங்தள் அமைப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் தாக்க முயன்றனர். இதனால் அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.
மாட்டுக்கறி சர்ச்சை
நாடு முழுவதும் பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்பினர் மாட்டிறைச்சி சாப்பிடுவதற்கு எதிராக கருத்து தெரிவித்து வருவதுடன், பசுக்களை கடத்தி செல்வதாக கூறி அடித்து கொலை செய்யும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. பாஜக ஆளும் பல மாநிலங்களில் பசுவதை தடை சட்டங்களும் கொண்டு வரப்பட்டு இருக்கின்றன.
ரன்பீர் பேட்டி
இந்த நிலையில், நடிகர் ரன்பீர் கபூர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னதாக ஒரு நேர்காணலில் மாட்டுக்கறி சாப்பிடுவது நல்லது என்றும், தனக்கு அது பிடிக்கும் என்றும் பேசி இருந்தார். இந்த பழைய பேட்டியை எடுத்துக்கொண்டு வந்த பிரம்மாஸ்திரா படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று கூறி #BoycottBrammastra என்ற ஹேஷ்டேக்கை இந்துத்துவா அமைப்பினர் ட்விட்டரில் டிரெண்ட் செய்தனர்.
போராட்டம்
இந்த நிலையில் இதே காரணத்தை வைத்து பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்தவர்கள் ரன்பீர் – ஆலியா ஜோடியை கோயிலுக்கு செல்ல விடாமல் தடுத்து இருக்கின்றனர். அந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் பேசும் பஜ்ரங்தள் நிர்வாகி,
“கோமாதாவுக்கு எதிராக பேசிய ரன்பீர் கபூரை கோயிலுக்குள் விட மாட்டோம்.” என்கிறார்.
வழக்குப்பதிவு
இதுகுறித்து உஜ்ஜைன் சி.எஸ்.பி. பிரகாஷ் மிஸ்ரா தெரிவிக்கையில், கோயிலுக்கு வரும் முக்கிய பிரபலங்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றனர். அப்போது அவரை சுற்றிவளைத்து சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடுக்க முயன்ற போலீசார் மீது தாக்குதல் நடத்தினார்கள்.” என்றார். இதையடுத்து பஜ்ரங்தள் அமைப்பினர் மீது அரசு ஊழியரை தாக்கிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.