மாதம் ரூ1,000 வழங்கும் திட்டம்; ஏழை கல்லூரி மாணவிகளின் வாழ்வில் புதிய வெளிச்சம்: தமிழக அரசுக்கு பாராட்டு குவிகிறது

திருச்சி: தமிழகத்தில் செயல்பட்டு வந்த மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என்று மாற்றப்பட்டது. அதன்படி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை மாதந்தோறும் ரூ.1000 அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும்.

இந்த திட்டத்தை தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், கடந்த 5ம் தேதி தொடங்கி வைத்தார். இத்திட்டம் ஏழை மாணவிகளுக்கு பயனுள்ளதுடன் தடையின்றி கல்வி பயில உதவும். உயர் கல்வி பயில பெற்றோர் கையை எதிர்பார்க்க வேண்டியதில்லை. இதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என நிதியுதவி பெற்ற மாணவிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி இன்ஜினியரிங் கல்லூரியில் இளங்கலை இறுதியாண்டு படிக்கும் மாணவி ஹரிணி: இந்த தொகையை நான் முழுவதும் கல்விக்காக மட்டுமே பயன்படுத்துவேன். இந்தத் திட்டம் என்னை போன்ற ஏழை மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மேலும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகள் எந்தவித தடையும் இன்றி உயர்கல்வி தொடர உதவியாக இருக்கும்.

புதுக்கோட்டை தனியார் கல்லூரி மாணவி அக்‌ஷயா: தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் திருமணத்திற்கு மட்டுமே பயன்படும். ஆனால் தற்போது தமிழக அரசு செயல்படுத்தி உள்ள புதுமைப்பெண் திட்டம் பெற்றோரை எதிர்பார்க்காமல் எங்களது உயர்கல்வியை பெற பயனுள்ளதாக இருக்கும். இந்த திட்டத்தை அறிவித்து செயல்படுத்திய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி.

மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கல்லூரி மாணவி ஆர்த்தி: தமிழக முதல்வரின் புதுமைப்பெண் திட்டம் உதவித்தொகை அறிவிப்பால் படிப்பின் மீது இப்போது ஒருவித ஆர்வமும், ஈடுபாடும் மேலோங்கி உள்ளது. இந்த உதவித்தொகையைக் கொண்டு பல்வேறு போட்டித் தேர்வுகளுக்குரிய புத்தகங்களை வாங்கிப் படித்து முன்னேறுவேன். எதிர்வரும் காலங்களில் பெற்றோர் தங்கள்  குழந்தைகளைக் கட்டாயம் அரசுப் பள்ளியில் மட்டுமே சேர்த்துப் படிக்கச் செய்யும் நிலையை இது உருவாக்கும்.

மேலகண்டமங்கலம் கல்லூரி மாணவி சிவசங்கரி: தந்தையின்றி தாயின் அரவணைப்பில் குடும்ப வறுமையின் காரணமாக கல்லூரி படிப்பைத் தொடர்ந்து எப்படி படிக்கப் போகிறோம் என்று கலங்கித் தவித்த வேளையில் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை என்று தமிழக முதல்வரின் தாயுள்ளம் கொண்ட அறிவிப்பானது என் போன்ற மாணவிகளின் வாழ்க்கையில் ஒரு புதிய வெளிச்சத்தைத் தந்திருப்பதை ஒருபோதும் மறக்க முடியாது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.