முதுகுளத்தூர் பேரூராட்சி தலைவர் தேர்தலை ரத்து செய்ய கோரிய வழக்கில் மாநில தேர்தல் ஆணையம் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்த முத்தாண்டி என்பவர் தாக்கல் செய்த மனுவில் முதுகுளத்தூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில், 11வது வார்டு உறுப்பினராக வெற்றிபெற்ற அதிமுக-வை சேர்ந்த தர்மர் பேரூராட்சியின் தலைவராக தேர்வானதாகவும், பின்னர் ராஜ்யசபா உறுப்பினராக தர்மர் தேர்வு செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து 11ஆவது வார்டு உறுப்பினர் பதவி காலியான நிலையில் முதுகுளத்தூர் பேரூராட்சியின் சேர்மன் பதிவியும் காலியானது, இந்நிலையில் 11ஆவது வார்டுக்கு தேர்தல் வைக்காமல் பேரூராட்சி சேர்மன் பதவிக்கு மறைமுக தேர்தலை நடத்தப் போவதாக ஆகஸ்ட் 24ஆம் தேதி மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இது சட்டத்திற்கு புறமானது என்பதால், அந்த அரசாணை ரத்து செய்து முதுகுளத்தூர் பேரூராட்சியின் 11வது வார்டுக்கு தேர்தல் நடத்திய பின்பு, சேர்மன் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என். மாலா முன்பு விசாரணைக்கு வந்தபோது, மாநில தேர்தல் ஆணையம் தரப்பில், இன்று நடக்க இருந்த தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சனை காரணமாக தள்ளிவைத்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்கு குறித்த மாநில தேர்தல் ஆணையம் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை செப்டம்பர் 14 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.