முன்னாள் படைவீரர் சங்கத்திற்கான நிரந்தர அலுவலகக் கட்டிடம் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது – பாதுகாப்பு செயலாளர்

இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்திற்கான நிரந்தர அலுவலகக் கட்டிடத்தை பாதுகாப்பு தலைமையக வளாகத்திற்குள் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

இதற்கமைய, 175 பேர்ச்சஸ் பரப்பு கொண்ட காணியொன்று ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் 78 ஆவது ஆண்டு நிறைவு விழா நிகழ்வு அத்திடியவிலுள்ள ஈகிள்ஸ் லேக்சைட் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இங்கு மேலும் உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர், உயிரிழந்த மற்றும் அங்கவீனமுற்ற வீரர்கள் போரின் போது தாய் நாட்டைப் பாதுகாப்பதற்காக ஆற்றிய உன்னத சேவைகளையும் நினைவு கூர்ந்தார்.

அண்மைக் காலத்தில் நாம் நடைமுறைப்படுத்தியதைப் போன்று, தற்போதைய ஜனாதிபதியின் வழிகாட்டுதலுடன் முன்னாள் படைவீரர் சங்கம் மற்றும் அதன் சேவைகளை வளப்படுத்துவதற்கும் நாங்கள் எதிர்பார்த்துள்ளோம் என்றும் அவர் உறுதியளித்தார்.
அண்மையில் இடம்பெற்ற போராட்டங்கள் குறித்து கருத்து வெளியிட்ட பாதுகாப்பு செயலாளர், ஜனநாயகம் என்ற போர்வையில் எமது இளம் படைவீரர்களின் உன்னத சேவையை குறைத்து மதிப்பிடும் வகையில் கேவலமான வீடியோ காட்சிகள் பரப்பப்பட்டு வருவது வருத்தமளிக்கிறது என்றார்.

எனவே, தாய்நாட்டைக் காக்க எமது இளம் படைவீரர்களை முன்னாள் படைவீரர்கள் ஊக்குவிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த நிகழ்வின் போது முன்னாள் படைவீரர் சங்க உறுப்பினர்கள் பலருக்கு பாதுகாப்பு செயலாளரினால் கௌரவான்வித சேவா பதக்கம் (கௌரவ சேவை பதக்கம்) அணிவிக்கப்பட்டது.

மங்கள விளக்கேற்றும் வைபவத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் முன்னாள் படைவீரர் சங்க தலைவர் மேஜர் ஜெனரல் உபுல் பெரேராவின் வரவேற்பு உரை நிகழ்த்தப்பட்டது. மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு முன்னாள் படைவீரர் சங்க வாழ்நாள் உறுப்பினர் பதவியும் வழங்கப்பட்டது.

காலக்கிரமத்திற்கேற்ப முன்னாள் படைவீரர் சங்கத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் தொடர்பான முன்னேற்ற அறிக்கை அதன் தலைவர் மேஜர் ஜெனரல் உபுல் பெரேராவினால், இந்த நிகழ்வின் போது பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்டது.
மிகவும் சிறப்பான முறையில் இடம் பெற்ற இந்த ஆண்டுவிழா கொண்டாட்டத்தின் போது கண்கவர்
பொழுதுபோக்கு நிகழ்வுகள் பலவும் அரங்கேற்றப்பட்டன.

1944 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட முன்னாள் படைவீரர் சங்கம், இன்று, ஒன்றிணைந்த 48 ஆயுதப் படை சங்கங்களில் உள்ள சுமார் 45,000 உறுப்பினர்களுடன் குறிப்பிடத்தக்க நிலைக்கு உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, முன்னாள் முப்படைத் தளபதிகள், பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார, முன்னாள் படைவீரர் சங்க செயலாளர் நாயகம் லெப்டினன்ட் கேணல் அஜித் சியம்பலாபிட்டிய, முன்னாள் படைவீரர் சங்க உறுப்பினர்கள் மற்றும் அதிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Ministry of Defence  – Media Centre
152, Galle Road
Colombo 03.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.