சென்னை : மம்முட்டி தனது 71வது பிறந்தநாளை இன்று சிறப்பாக கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள்,ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
கோலிவுட்டில் கமல், ரஜினி என்ற இரு ஆளுமைகளைப் போல, மாலிவுட்டில் மம்முட்டியும், மோகன்லாலும் எப்போதும் கதாநாயகர்கள் தான்.
இன்று பிறந்த நாளை கொண்டாடும் மெகாஸ்டாரைப் பற்றிய சில அறியப்படாத மற்றும் அவரது ரசிகர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரசியமான தகவல்களை பார்க்கலாம்.
முகம்மது குட்டி
ஆழப்புழைக்கு அருகில் சிற்றூரில் பிறந்த முகம்மது குட்டியாக பிறந்த மம்முட்டி. தனது இடவிடாத முயற்சியால் தனது 21ம் வயதில் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கே.எஸ்.சேதுமாதவனின் ‘அனுபவங்கள் பாளிச்சகல்’ படத்தில் பழம்பெரும் மலையாள நடிகரான பகதூருக்கு அருகில் வசனம் எதுவும் பேசால் கூட்டத்தில் ஒருவராக தன் முகத்தை மட்டும் காட்டினார்.
கடுமையான உழைப்பு
மம்முட்டியின் வளர்ச்சியில் ஐ.வி. சசிக்கு முக்கிய பங்கு உண்டு. 80களில் தொடக்கத்தில் கிடைத்த கதாபாத்திரத்தில் நடித்து வந்த மம்முட்டி, தனது அயராத உழைப்பால் ஐந்தாண்டுகளிலேயே தவிர்க்க முடியாத கதாநாயகனார். இந்த அந்தஸ்து பெற்றதற்கு சசியின் படங்கள் பெரும் பங்காக அமைந்தன. மம்முட்டிக்கு முதல் விருதைப் பெற்றுத் தந்தது சசியின் படம் தான்.
சுவாரசியத்தகவல்
மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் மற்றும் கன்னடம் ஆகிய ஆறு வெவ்வேறு மொழிகளில் 400 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மம்முட்டியை திரையில் பார்த்து லாபித்து பூரித்துப்போன ரசிகர்களுக்கு அவர் குறித்து வெளியில் தெரியாத சில சுவாரசியத் தகவல்கள் இதோ.
உணவில் கவனம்
நடிகர் மம்முட்டிக்கு உணவில் அதிக ஈடுபாடு கொண்டவராம், இதனால், மம்முட்டி எங்கு இருக்கிறாரோ அங்கு அவரின் சமையல்காரர் நிச்சயம் இருப்பாராம். ஷூட்டிங்கிற்காக எங்கு சென்றாலும் தனது ஆஸ்தானா சமையல்காரரை தனது சொந்த செலவில் உடன் அழைத்துச்சென்று அவர் சமைக்கும் உணவைத்தான் சாப்பிடுவாராம்.
மனைவிக்கு மரியாதை
அதே போல நடிகர் மம்முட்டி தான் சம்பாதித்த பணத்தை தன் மனைவியிடம் ஒப்படைத்து விடுவாராம். அவருடைய மனைவி தான் வரவு செலவு கணக்குகளை கவனித்துக்கொள்வதாகவும், நடிப்பது மட்டும் தான் என் வேலை மற்றதை என் மனைவி கவனித்துக்கொள்வார் என்று மம்முட்டி ஒருபேட்டியில் கூறியுள்ளார்.
பெயரை மாற்றினார்
தொடர் தோல்விகளுக்குப் பிறகு மம்முட்டி ஒரு வெற்றிப்படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். இந்த நேரத்தில் தன் பெயரை மாற்றினால் ஏதாவது மாற்றம் வருமா என நினைத்து. மம்முட்டி தனது பெயரை சஜின் என்று மாற்ற முடிவு செய்தார். 1981 ஆம் ஆண்டு வெளியான “ஸ்போதனம்” திரைப்படத்தில் சஜின் என்ற பெயர் டைட்டில் கார்டில் இடம் பெற்றது.
கைப்பந்து வீரர்
நடிகர் மம்முட்டி நடிகர் மட்டுமில்லாமல் ஒரு சிறந்த கைப்பந்து விளையாட்டு வீரர் ஆவார். சினிமாவில் நுழைவதற்கு முன்பு பல விளையாட்டுப்போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இதனால், இளம் மற்றும் திறமையான கைப்பந்து வீரர்களை ஊக்குவிக்கும் கேரள வாலிபால் லீக்கின் பிராண்ட் அம்பாசிடராகவும் இருக்கிறார்.
வழக்கறிஞர்:
அது மட்டும் இல்லை இன்னொரு ஸ்பெஷல் ஐட்டம் இருக்கு என்று சொல்வது போல மம்முட்டி ஒரு வழக்கறிஞர். அவர் எர்ணாகுளம் சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி படித்த பிறகும், இரண்டு வருடங்கள் அங்கேயே வழக்கறிஞராக பயிற்சியும் செய்துள்ளார்.
தங்கமான மனசு
நடிகர் மம்முட்டி தன்னை தேடிவரும் தொண்டு நிறுவனங்களுக்கு இல்லை என்று சொல்லாமல் அனைத்து உதவியையும் செய்யும் குணம் கொண்டவர். தெருக் குழந்தைகளுக்கு சிறந்த வாழ்க்கை முறையை அளிக்கும் ஸ்ட்ரீட் இந்தியா இயக்கத்தில் நல்லெண்ணப் பிரதிநிதியாக இருக்கிறார் மம்முட்டி.