காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின், இந்திய ஒற்றுமை பயணத்தை, தமிழக முதலமைச்சர் தேசியக் கொடி வழங்கி தொடங்கி வைத்தார்.
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை சுமார் 3,500 கி.மீ. தூரத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் நடைபயணம் செல்கிறார். இதற்காக தமிழகம் வந்துள்ள ராகுல் காந்தி காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தந்தை ராஜிவ் காந்தி நினைவிடத்தில் இன்று காலை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த பாதயாத்திரையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், அகில இந்திய நிர்வாகிகள், அந்தந்த மாநில நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரும் ராகுல் காந்தியுடன் செல்கிறார்கள்.
மாலையில் கன்னியாகுமரி வந்த ராகுல் காந்தி, அங்குள்ள திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டார். பின்னர் காந்தி மண்டபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மரியாதை செலுத்தினார்.
ராகுல் காந்தியை இன்முகத்துடன் வரவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டி அணைத்து பொன்னாடை போர்த்தினார். ராகுல் காந்தி மேற்கொள்ள உள்ள இந்த யாத்திரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியக் கொடி வழங்கி துவக்கி வைத்தார்.