திருச்சி: ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, பஞ்சக்கரை சாலையில் 6 ஏக்கரில் வாகன நிறுத்துமிடம் அமைக்க திருச்சி மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆனால், அவர்கள் வரும் கார், வேன், பேருந்து போன்ற வாகனங்களை நிறுத்த உரிய இடவசதி இல்லாததால், கோயிலைச் சுற்றி கிடைக்கும் இடங்களில் நிறுத்திவிட்டுச் செல்கின்றனர். இதனால் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே, கோயிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த உரிய வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் பேசிய 2-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜவகர், ‘‘ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்காக இந்து சமய அறநிலைத்துறை சார்பில் கடந்த 2011-ம் ஆண்டு யாத்திரி நிவாஸ் கட்டப்பட்டது. இதை கட்டுவதற்கு தேவையான இடத்தை மாநகராட்சி வழங்கிய நிலையில், அதற்கு ஈடான அறநிலையத் துறைக்கு சொந்தமான இடத்தை மாநகராட்சிக்கு வழங்க வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே, மாற்று இடத்தை பெற மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என வலியுறுத்திப் பேசினார்.
இதையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து, ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை சாலை கொள்ளிடக் கரையோரத்தில், யாத்திரி நிவாஸ் விடுதிக்கு எதிரே உள்ள தங்களுக்குச் சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை வழங்க அறநிலையத் துறை ஒப்புக் கொண்டுள்ளது.
இந்நிலையில், அந்த இடத்தில் வாகன நிறுத்துமிடம் அமைப்பது குறித்து மாநகராட்சி நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. மேலும், அந்த இடத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஆணையர் ஆர்.வைத்திநாதன் உள்ளிட்டோர் அண்மையில் பார்வையிட்டு, அங்கு வாகன நிறுத்துமிடம் அமைப்பது குறித்து ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘அறநிலையத் துறையிடமிருந்து நிலத்தை பெற்ற பின், அங்கு முதற்கட்டமாக கரையோரத்தில் தாங்கு சுவர் கட்டப்படும். பின்னர், வாகனங்களை நிறுத்த கான்கிரீட் தளம், கழிப்பறைகள், ஓட்டுநர்களுக்கு குளியல் அறை, கடைகள், குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும். மேற்கூரை அமைக்காமல் திறந்தவெளி வாகன நிறுத்துமிடமாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றனர்.