சென்னை: கடந்த 2018-19 மற்றும் 2019-20ம்ஆண்டுகளில் ‘முதல்வர் மாநில விளையாட்டு விருதுக்கு’ தேர்வானவர்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருது தொகைக்காக தமிழக அரசு ரூ.16.30 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
கடந்த 1996-ம் ஆண்டு முதல், முதல்வர் மாநில விளையாட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன. 2004-ல் உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள், 2008-ல் விளையாட்டு நிர்வாகி,கொடையாளர், நடுவர்களும் விருதாளர்களாக சேர்க்கப்பட்டனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் – செயலர், 2018-19, 2019-20-ம் ஆண்டுகளுக்கான விருதாளர் தேர்வுப் பட்டியலை அரசுக்கு அனுப்பியுள்ளார்.
அதன்படி, 2018-19ம் ஆண்டுக்குசிறந்த விளையாட்டு வீரர்களாக டென்னிஸ் வீரர்கள் எஸ்.பிரிதிவிசேகர், ஜீவன் நெடுஞ்செழியன், சிறந்த வீராங்கனைகளாக பி.நிவேதா (துப்பாக்கி சுடுதல்),சுனைனா சாரா குருவில்லா (ஸ்குவாஷ்), சிறந்த பயிற்சியாளர்களாக சத்குருதாஸ் (ரைபிள் ஷூட்டிங்), ஜி.கோகிலா (தடகளம்), சிறந்த உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியராக சி.ராஜேஷ் கண்ணா (கால்பந்து), எம்.பி.முரளி (கைப்பந்து), சிறந்தநடுவராக வி.பி.தனபால் (கூடைப்பந்து) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சிறந்த விளையாட்டு அமைப்பாளராக தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, 2019-20-ம் ஆண்டுக்கு சிறந்த வீரர்களாக பிரஜ்னேஷ் குணேஸ்வரன் (டென்னிஸ்), ஆர்.மோகன்குமார் (தடகளம்), சிறந்த வீராங்கனைகளாக பி.அனுசுயா பிரியதர்ஷினி (டேக்வாண்டோ), எஸ்.செலேனா தீப்தி(மேஜைப்பந்து), சிறந்த பயிற்சியாளராக கே.எஸ்.முகமது நிஜாமுதீன் (தடகளம்), ஜி.கோகிலா (கால்பந்து), சிறந்த உடற்கல்வி இயக்குநர், ஆசிரியராக ஆர்.ராமசுப்பிரமணியன் (பால் பாட்மிண்டன்), ஏ.ஆரோக்கிய மெர்சி (கைப்பந்து), சிறந்த நடுவராக டி.சுந்தரராஜ் (கபடி) ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ரூ.1 லட்சம் விருது தொகை
நடுவருக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பிலான தங்கப் பதக்கம், மற்ற விருதாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் விருது தொகை வழங்கப்படும். இதற்காக தமிழக அரசு ரூ.16.30 லட்சம் நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.