டெல்லி: தலைநகர் டெல்லியில் தொடர்ந்து 5வது ஆண்டாக பட்டாசு வெடிக்க கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி அரசு தடை விதித்துள்ளது. 2023 ஜனவரி 1 வரை பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
காற்று மாசு காரணமாக, உச்சநீதிமன்றம் பட்டாசு வெடிக்க பல்வேறு தடைகளை போட்டுள்ளது. மேலும், பசுமை பட்டாசு மட்டுமே தயாரிக்க வேண்டும் என வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் அறிவித்து உள்ளது. தலைநகர் டெல்லியில் காற்று மாசு மிகமோசமாக உள்ளதால், அங்கு தீபாவளி பண்டிகைக்குகூட பட்டாசு வெடிக்கவும், விற்பனை செய்யவும், தடை விதிக்கப்பட்டு உள்ளது.
டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு கருத்தில் கொண்டு தீபாவளி பண்டிகை உள்பட விழா காலங்களில் பட்டாசு வெடிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதித்து அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், தற்போது 5வது ஆண்டாக, தீபாவளி பண்டிகை சமயத்தில் அனைத்து வகை யான பட்டாசுகளையும் உற்பத்தி செய்யவும், சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும், வெடிக்கவும் முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்துக்களின் முக்கிய பண்டிகையான, அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை வர உள்ள நிலையில் 2023ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி வரை பட்டாசுகளுக்கு விதிக்கப்பட்ட தடை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.