Delhi Firecrackers Ban: ஜனவரி 1 வரை பட்டாசு விற்க, வெடிக்க தடை: டெல்லி அரசு அதிரடி!

டெல்லியில், வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதி வரை, பட்டாசு விற்பனை, வெடிக்க மற்றும் சேமித்து வைக்க அம்மாநில அரசு தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.

டெல்லியில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தலைநகரான டெல்லியில், எப்போதும் காற்று மாசு அதிகரித்து காணப்படும். டெல்லி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை மற்றும் தேவையற்ற பயிர்களை, விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதாலும், காற்றின் தரம் மிகவும் மோசமாக இருக்கும்.

காற்று மாசைக் கட்டுப்படுத்த மத்திய – மாநில அரசுகள் என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு ஒரு தீர்வு காணப்படவில்லை. இதன் காரணமாக தலைநகர் டெல்லியில் கடந்த நான்கு ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிக்க, விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் இந்தாண்டும் தீபாவளி பண்டிகை அன்று, பட்டாசு வெடிக்க, விற்பனை செய்ய மற்றும் சேமித்து வைக்க, அம்மாநில அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. நடப்பு ஆண்டு அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் கோபால் ராய், சமூக வலைதளமான ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து உள்ளதாவது:

மக்களின் உயிரைக் காப்பாற்றும் வகையில் அனைத்து வகையான பட்டாசுகளின் உற்பத்தி, சேமிப்பு, விற்பனை மற்றும் பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்பட்டு உள்ளது. ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடை உத்தரவு, வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, ஓராண்டு காலமாக, உயிரை பணயம் வைத்து, தீபாவளி விற்பனைக்காக, தயார் செய்த பட்டாசுகள் முதலீடு வீணாகி விடும் என்று பட்டாசு வியாபாரிகள் கவலை தெரிவித்து உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.