How to: தாய்ப்பாலை சேமிப்பது எப்படி? |How To Store Breast Milk?

தாய்ப்பால் குழந்தைகளுக்கு உயிர் அமிர்தம். ஆனால், பணிபுரியும் பெண்கள் மற்றும், பயணம் உள்ளிட்ட சூழ்நிலைக் காரணங்களால் சில பெண்களால் குழந்தைகளுக்குத் தேவையான நேரத்தில் தாய்ப்பால் கொடுக்க முடியாமல் போகலாம். அவர்கள், தாய்ப்பாலை சேமித்து வைத்து, தேவையான நேரத்தில் குழந்தைக்குப் புகட்டலாம். தாய்ப்பாலை எப்படி சேமிப்பது? எந்தெந்த வகைகளில் சேமிக்கலாம்? இங்கு பார்க்கலாம்…

தாய்ப்பால்

தாய்ப்பாலை சேமிப்பதற்கு முன், மார்பகங்கள் மற்றும் தாய்ப்பால் பம்ப் செய்யும் மெஷின் போன்றவற்றை நன்றாக சுத்தம் செய்வது அவசியம். சேமிக்கப்படும் தாய்ப்பாலை எத்தனை நாள்களுக்குள் பயபடுத்த இருக்கிறோமோ, அதை பொறுத்து, குளிர்சாதனப் பெட்டியில் அல்லது ஃப்ரீஸரில் சேமிக்கலாம்.

குளிர்சாதனப் பெட்டியில் சேமிக்கும்போது…

* தாய்ப்பாலை பம்ப் செய்து, நன்றாக சுத்தம் செய்த, மூடியுடன் கூடிய ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரத்தில் சேமிக்கவும்.

* தாய்ப்பால் சேமித்த பாத்திரத்தை குளிர்சாதனப் பெட்டியில், காய்கறிகள் வைக்கும் பகுதியின் மேல்புறத்தில் வைக்கவும்.

தாய்ப்பால்

* பக்கவாட்டில் இருக்கும் கதவு பகுதியில் வைக்க வேண்டாம். இங்கு வெப்பநிலை சற்று குறைவாக இருப்பதால், தேவையான அளவுக்குத் தாய்ப்பாலை குளிரூட்ட முடியாது.

* குளிர்சாதனப் பெட்டி, 4°C (39° F) என்ற வெப்பநிலையில் இருப்பது போல செட் செய்யவும்.

* சேமித்த தாய்ப்பாலை ஃபிரிட்ஜில் மேற்கூறிய வெப்பநிலையில், மூன்று நாள்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.

* ஃபிரிட்ஜில் இருந்து எடுத்த பாலை, அறை வெப்பநிலைக்குக் கொண்டு வந்த பின்னரே பயன்படுத்த வேண்டும். அதற்கு, ஒரு பாத்திரத்தில் அறை வெப்பநிலையில், அல்லது வெதுவெதுப்பான நிலையில் உள்ள தண்ணீரை ஊற்றி, அதன் மீது பால் பாட்டிலை வைத்து, அதில் சேமித்த தாய்ப்பாலை ஊற்றி, அறை வெப்பநிலைக்கு வந்த பின் குழந்தைக்குப் புகட்டவும்.

* ஏற்கெனவே குளிர்ந்த நிலையில் இருக்கும் பாலில், அரை வெப்பநிலையில் இருக்கும் பாலை சேர்க்க வேண்டாம்.

உறைநிலையில் சேமிக்கும்போது…

* தாய்ப்பாலை உறைநிலையில் சேமிக்கும் முன், மார்பகங்கள் மற்றும் பாலை சேமிக்கும் பாத்திரங்களை சுத்தம் செய்து கொள்ளவும்.

* மிகக்குறைந்த கொள்ளளவிலான பாத்திரம், அதிகபட்சமாக 60 மிலி அளவிலான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும்.

* பம்ப் செய்யப்பட்ட பாலை, பாத்திரத்தின் முக்கால் பாகம் அளவுக்கு சேமித்து, ஃப்ரீஸரில் வைக்கவும்.

* -18°C (0°F ) வெப்பநிலையில் சேமித்து வைப்பது நல்லது.

* இவ்வாறு சேமித்து, மூன்று மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.

தாய்ப்பால்

* சேமித்து வைக்கப்பட்ட தாய்ப்பாலை ஃப்ரிட்ஜில் இருந்து வெளியில் எடுக்கும்போது, பாத்திரத்தை குலுக்கி, பின் பயன்படுத்துவது நல்லது.

* குளிர்ந்துள்ள பாலை அதிகபட்சம் 37 °C அல்லது 99 °F உள்ள தண்ணீரில், மேலே சொன்னவாறு வைத்து எடுத்து, அறை வெப்பநிலைக்கு கொண்டு வந்து, பயன்படுத்தலாம். ஃபிரிட்ஜில் இருந்து வெளியே எடுத்த பாலை அதிகபட்சம் இரண்டு மணி நேரத்திற்குள் பயன்படுத்த வேண்டும்.

* உறைநிலையில் இருந்து எடுத்து அறை வெப்பநிலைக்குக் கொண்டு வரப்பட்ட பாலில், பயன்படுத்தியது போக மிச்சம் இருந்தால் அப்புறப்படுத்தி விடவும்; மீண்டும் ஃபிரிட்ஜில் வைக்க வேண்டாம். அதற்காகத்தான் சிறிய அளவிலான பாத்திரங்களில், பிரித்து சேமித்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.