ராஞ்சி: டெல்லி பயணம் குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பொறுப்பே இல்லாமல், முகம் சுழிக்கும் வகையில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரர் பசந்த் சோரன் பதிலளித்திருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது.
ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு 2019-ல் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைத்தன. ஹேமந்த் சோரன் முதல்வராகப் பதவியேற்றார்.
காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா இரண்டு கட்சிகளுக்கும் இடையே அவ்வப்போது முரண்பாடுகள் வந்த போதும் ஓரளவு சுமூகமாகவே ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரம், ஜார்க்கண்ட் அரசியலில் புயலை வீசி வருகிறது.
நெருக்கடியில் ஹேமந்த் சோரன்
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தமது பெயரில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு பெற்றது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானது; அதனை மீறியதால் ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ. பதவியை பறிக்க வேண்டும் என கோரியது பாஜக. இதனை தேர்தல் ஆணையத்திடமும் புகாராக கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்திய தேர்தல் ஆணையம், ஆளுநருக்கு சீலிட்ட கவரில் ரகசிய அறிக்கை ஒன்றை அனுப்பியது.
முதல்வர் பதவிக்கு நெருக்கடி
ஜார்க்கண்ட் ஆளுநருக்கு அனுப்பட்ட அறிக்கையில், ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ. பதவியை பறிக்க தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஹேமந்த் சோரனின் முதல்வர் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஆனாலும் இது தொடர்பாக ஆளுநர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
எம்.எல்.ஏக்களுடன் பயணம்- நம்பிக்கை வாக்கெடுப்பு
இந்நிலையில் ஹேமந்த் சோரன் தமது ஆதரவு எம்.எல்.ஏக்களை தக்க வைக்க உல்லாச பயணங்களுக்கு அழைத்துச் சென்றார். ஜார்க்கண்ட் அரசியல் சூழ்நிலையை பயன்படுத்தி எம்.எல்.ஏக்களை பாஜக வளைத்துவிடும் என்பதால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார் ஹேமந்த் சோரன். ஒரு கட்டத்தில் அண்டை மாநிலமான சத்தீஸ்கருக்கும் அந்த எம்.எல்.ஏக்களை அழைத்துச் சென்று தங்க வைத்தார் அவர். அதன்பின்னர் ஜார்க்கண்ட் சட்டசபையில் தாமே முன்வந்து நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். இந்த நம்பிக்கை வாக்கெடுப்பிலும் ஹேமந்த் சோரன் வென்றார்.
பசந்த் சோரனின் பொறுப்பில்லா பதில்
இந்த பின்னணியில் ஹேமந்த் சோரனின் சகோதரர் பசந்த் சோரனை மையமாக வைத்து பல்வேறு வதந்திகள் பரவின. ஒட்டுமொத்தமாக ஜார்க்கண்ட் மாநிலமும் அரசியல் பரபரப்பில் மூழ்கிக் கிடக்க பசந்த் சோரன், டெல்லியில் முகாமிட்டிருந்தார். பசந்த் சோரனின் டெல்லி பயணம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, நான் உள்ளாடைகள் வாங்கவே டெல்லி போனேன் என முகம் சுழிக்கும் வகையில் பதிலளித்தார் பசந்த் சோரன். இப்போது இந்த பதிலே சர்ச்சையாக வெடித்துள்ளது. பாஜக உள்ளிட்ட கட்சிகள் பசந்த் சோரனை கடுமையாக விமர்சித்து வருகின்றன.