குவாஹாட்டி: மாநிலத்தின் கோல்பாரா மாவட்டத்தில் மதரஸா பள்ளி ஒன்று இயங்கி வந்தது. இதை ஜலாலுதீன் ஷேக் என்பவர் நடத்தி வந்தார். அவர், வங்கதேசத்தை சேர்ந்த இருவரை, இந்த மதரஸா பள்ளியின் ஆசிரியர்களாக நியமித்திருந்தார்.
இந்நிலையில், ஜலாலுதீனுக்கு அல்-கய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அதனால் வங்கதேச மதரஸா ஆசிரியர்கள் தப்பியோடிவிட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் உள்ளூர் முஸ்லிம் மக்கள் ஆத்திரம் அடைந்து மதரஸா பள்ளியை இடித்து தள்ளினர். கோல்பாரா மாவட்டத்தில் முஸ்லிம்களே மதரஸா பள்ளியை இடித்தது இதுவே முதல் முறை. தீவிரவாதிகள் பலர் மசூதிகளில் இமாம் அல்லது மதரஸா ஆசிரியர்கள் என நுழைய வாய்ப்புள்ளது. எனவே தீவிரவாதிகளை அடையாளம் காண அதிகாரிகளுக்கு மக்கள் உதவ வேண்டும் என்றுமுதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறி யிருந்தார். இந்நிலையில் கோல்பாராவில் மதரஸா இடிக்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து கோல்பாரா எஸ்.பி ராகேஷ் கூறுகையில், ‘‘ மதரஸாவை உள்ளூர் முஸ்லிம் மக்களே இடித்தது பற்றி எங்களுக்கு தகவல் தெரியாது. இதில் மாவட்ட நிர்வாகத்தினர் யாரும் ஈடுபடவில்லை’’ என்று தெரிவித்தார்.