நெல்லூர்: ஆந்திர மாநிலம் நெல்லூரில் அரசு பள்ளி மாணவி ஆசிரியர் எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்லி கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிஞ்சமுறு உயர்நிலை பள்ளியில் 7ம் வகுப்பு படித்த மாணவி ஷேக் சஜிதா, வகுப்பறையில் ஆசிரியர் கேள்வி கேட்டபோது அதற்கு பதில் கூறி கொண்டிருந்தார். அப்போது திடீரென கண்கள் மேலே பார்த்தபடி சிறுமி மயங்கி சுருண்டு விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் உடனடியாக குழந்தைகள் நல மருத்துவமனைக்கு ஷேக் சஜிதாவை தூக்கி கொண்டு ஓடினர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுமி இறந்துவிட்டதை உறுதி செய்தனர்.
இந்த துயர செய்தியை கேட்டு மாணவியின் குடும்பத்தினர், உடன் படித்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கிராமத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர். இதுகுறித்து, அப்பள்ளியின் உயிரியல் ஆசிரியர் வெங்கடேஷ்வரலு தெரிவித்ததாவது, மாணவி இடம் கேள்விகள் கேட்டேன். மாணவி பதில் அளித்தார். திடீரென ஒரு பக்கம் சாய்ந்து கீழே விழுந்து கை கால்களை உதறினார். வலிப்பு என நினைத்து கையில் பேனாவை திணித்தேன். ஆனால் மாணவி மயங்கி விழுந்துவிட்டார். நாங்கள் அனைவரும் மாணவியை தூக்கிக்கொண்டு 5 நிமிடத்தில் மருத்துவரிடம் சென்றுவிட்டோம். ஆனால் மாணவி எதிர்பாராத விதமாக உயிரிழந்துவிட்டார் என சோகத்துடன் கூறினார்.