ஆசியகோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் சூப்பர் ஆட்டத்தில் இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது. இரு அணிகளுமே இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில், ஆறுதல் வெற்றிக்காக களமிறங்கியுள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் கே.எல்.ராகுலுடன் முன்னாள் கேப்டன் விராட்கோலி தொடக்க வீரராக களமிறங்கினார்.
கடந்த சில வருடங்களாக சரியாக ரன் குவிக்காமல் விமர்சனத்திற்கு உள்ளான விராட்கோலி ஆசியகோப்பை தொடரில் ஃபார்முக்கு திரும்பியுள்ள நிலையில், இந்த போட்டியில் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த ராகுலும் அவ்வப்போது பவுண்டரி அடித்து ரன் குவித்தார்.
தொடர்ந்து கோலி அரைசதம் அடித்த நிலையில், அடுத்த சில நிமிடங்களில் ராகுலும் தனது அரைசதத்தை பதிவு செய்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 119 ரன்கள் சேர்த்த நிலையில், 41 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 62 ரன்கள் குவித்த ராகுல் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் முதல் பந்திலேயே சிக்சர் அடித்தாலும் அடுத்த பந்தில் வெளியேறினார்.
அதன்பிறகு களமிறங்கிய ரிஷப் பண்ட கோலியுடன் ஜோடி சேர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மறுமுனையில் அதிரடியாக ஆடிய விராட்கோலி, சிக்சர் பவுண்டரிகளாக விளாசி டி20 போட்டிகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். கடந்த 3 வருடங்களாக சர்வதேச போட்டிகளில் சதம் அடிக்காத விராட்கோலி இதன் மூலம் அவரது ரசிகர்களின் தாகத்தை தனித்துள்ளார்.
20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. கடைசி வரை களத்தில் இருந்த விராட்கோலி 61 பந்துகளில் 12 பவுண்டரி 6 சிக்சருடன் 122 ரன்கள் குவித்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த பண்ட் 16 பந்துகளில் 20 ரன்கள் குவித்தார். தொடர்ந்து 213 ரன்கள் வெற்றி இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்க உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“