லண்டன்: இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால், அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
96 வயதான ராணி எலிசபெத்தின் உடல்நிலை அவ்வப்போது தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வந்தது. எனினும் தொடர்ந்து அவர் அரசு விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் பங்கேற்றார். தொடர்ந்து நடக்க முடியாத சூழலில், அவர் கைத்தடி ஏந்தி நிகழ்வுகளில் கலந்துகொண்டார். சமீபத்தில் கூட பிரிட்டன் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட லிஸ் ட்ரஸ், ராணியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்த நிலையில், கடந்த இரண்டு தினங்களாக ராணியில் உடல் நிலை ஆரோக்கியமாக இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ராணியின் உடல் நிலை மோசமாகி வருவதால், அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணியின் உடல் நிலை மோசமானதைத் தொடர்ந்து, அவரது நான்கு பிள்ளைகளும் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வந்திருப்பதாகவும், இதுகுறித்து நெருங்கிய உறவினர்களுக்கு தகவல் அளித்திருப்பதாகவும் லண்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் லிஸ் ட்ரஸ் ட்விட்டர் பக்கத்தில், “இந்த நேரத்தில் பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து வரும் செய்தியால் நாடு முழுவதும் ஆழ்ந்த கவலையில் உள்ளது. எனது எண்ணங்கள், நாட்டு மக்களின் எண்ணங்கள் அனைத்தும் அரசு குடும்பத்துடன் துணை நிற்கும்” என்று பதிவிட்டுள்ளார்.