இட ஒதுக்கீடு மறுப்பு: கொண்டாட்டத்தில் ஆண்கள்… மகளிருக்கு சமூக அநீதி!

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. மகளிர் தினம் கொண்டாட்டத்தில் தொடர்கிற கதை என்றாலும் அது வித்திடப்பட்டது போராட்டத்தில்தான். சமூக வாழ்வில் ஆண்களை மையப்படுத்தி பெண்களை அடிமைப்படுத்தும் சமூக அநீதியை எதிர்த்து போராடிய பெண்கள், தாங்கள் ஆணுக்கு இளைப்பில்லை என உலகறிய செய்துள்ளனர்.

பாலின சமத்துவம் எனும் சமூக நீதியை வலியுறுத்தும் நாளாகவும் மகளிர் தினம் கருதப்படுகிறது. அதிகாரத்தில் பெண்கள் சமபங்கு பெறும் போதுதான் பாலின சமத்துவம் காண இயலும். ஆனால், பெண்களுக்கான பாலினத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீதித்துறையில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு தேவை என்று ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என்.வி.ரமனா அண்மையில் வலியுறித்தியிருந்தார். “ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பெண்கள் ஒடுக்கப்படுகின்றனர். நீதிமன்றங்களிலும். சட்ட கல்லூரிகளிலும் இட ஒதுக்கீட்டை கோருவதற்கு மகளிருக்கு முழு உரிமை உண்டு. 50 சதவீத இட ஒதுக்கீடு பெண்களின் உரிமை.” என்று அவர் பேசியிருந்தார்.

இந்த நிலையில், தமிழக அரசின் வேலைவாய்ப்புகளில் மகளிருக்கு வழங்கப்பட்டுள்ள 30 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறை துரதிஷ்டவசமானது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்புகளில் மகளிருக்கு 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி 1989ஆம் ஆண்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதை செயல்படுத்துவதற்கு வசதியாக தமிழ்நாடு அரசு பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016 இல் 26 மற்றும் 27ஆவது பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி, பொதுப் பிரிவு மற்றும் இட ஒதுக்கீட்டுப் பிரிவுகள் 30 சதவீதம் மகளிருக்கு ஒதுக்கப்பட வேண்டும். மீதமுள்ள 70 சதவீதம் இடங்களில் ஆண்களுடன் இணைந்து பெண்களும் போட்டியிட வழிவகை செய்யப்பட்டிருந்தது. மகளிருக்கான இந்த இட ஒதுக்கீட்டை 30 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக ஆக உயர்த்தி அண்மையில் தமிழக அரசு உத்தரவிட்டது.

பெண்களுக்கு 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் இந்த முறை ஆண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், இந்த சட்டப்பிரிவை எதிர்த்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பலரும் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அடங்கிய அமர்வு, முதலில் பெண்களுக்கு ஒதுக்கீட்டின் அடிப்படையில் 30 சதவீதம் பெண் விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கி விட்டு, அதன் பிறகு சமுதாய ரீதியிலான இட ஒதுக்கீடை பின்பற்றும் நடைமுறையை தமிழக அரசும், அரசு பணியாளர் தேர்வாணையமும் பின்பற்றுவது துரதிஷ்டவசமானது என்று தெரிவித்துள்ளது.

இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என சுட்டிக்காட்டியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், “இதே நடைமுறைப்படி ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட நியமனங்களை ரத்து செய்வது முறையாக இருக்காது. அதே நேரத்தில் தகுதி அடிப்படையில் பணி நியமனம் பெறும் உரிமையையும் மறுக்க முடியாது. எனவே உச்ச நீதிமன்ற உத்தரவின்படி முதலில் பொதுப்பிரிவையும், பிறகு சமூக ரீதியிலான இட ஒதுக்கீடு அடிப்படையிலும் நிரப்பிவிட்டு, அதில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு பூர்த்தியாகவில்லை என்றால் எத்தனை இடங்கள் நிரப்ப வேண்டுமோ, அத்தனை இடங்களில் பெண்களை நிரப்ப வேண்டும்.” என உத்தரவிட்டுள்ளது.

மேலும் உச்ச நீதிமன்றத்தில் இந்த உத்தரவுக்கு ஏற்ப எதிர்காலத்தில் தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ளும் வகையில் விதிகளில் திருத்தம் கொண்டு வர அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள் வழங்குகளை முடித்து வைத்தனர். மகளிருக்கு முதலில் 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி விட்டு, மீதமுள்ள இடங்களிலும் அவர்களை போட்டியிட அனுமதிக்கத் தேவையில்லை என்கிறது உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு. அதாவது, பொதுப்பிரிவிலோ அல்லது சமூக ரீதியிலான இட ஒதுக்கீடு அடிப்படையிலோ பெண்களுக்கான 30 சதவீத ஒதுக்கீடு பூர்த்தியாகிவிட்டால், மீதமுள்ள இடங்களில் அவர்கள் போட்டியிட தேவையில்லை. ஒரு வேளை பூர்த்தியாகவில்லை என்றால், எத்தனை இடங்கள் பூர்த்தியாகவில்லையோ அத்தனை இடங்களுக்கு மட்டும் பெண்களை நிரப்ப வேண்டும்.

உதாரணமாக, 200 பணியிடங்களை நிரப்பும் போது பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 26.5 சதவீத (53 இடங்கள்) ஒதுக்கீட்டில், மகளிருக்கு 30 சதவீத (16 இடங்கள்) ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள 37 இடங்களிலும் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கத் தேவையில்லை. 16 இடங்களுக்கு குறைவாக பெண்கள் தேர்வாகியிருந்தால், எத்தனை இடங்கள் குறைவோ அத்தனை இடங்களை மட்டும் பெண்களுக்கு ஒதுக்கலாம் என்கிறது தீர்ப்பு. இந்த தீர்ப்பை ஆண்கள் கொண்டாடி வருகின்றனர். பெண்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட்டதாக அவர்கள் குற்றம் சாட்டி வந்த நிலையில், இந்த தீர்ப்பு ஆண்களுக்கு கொண்டாட்டமாக அமைந்துள்ளது.

ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை செயல்படுத்தினால், மகளிருக்கு 30 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதன் நோக்கமே சிதைக்கப்படக் கூடும். இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பெண் உரிமை செயற்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தத் தீர்ப்பு சமூகநீதிக் கொள்கைக்கு எதிரானது எனவும், இத்தீர்ப்பு செயல்படுத்தப்பட்டால் மகளிருக்கு அதிகபட்சமாகவே 30 சதவீத இடங்கள் மட்டுமே கிடைக்கும் நிலை உருவாகும் ஆபத்து உள்ளதாகவும் அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி அரசுப் பணிகளில் பெண்களுக்கான 30 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய உரிய சட்டத் திருத்தங்களை தமிழக அரசு மேற்கொள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

தீர்ப்பு குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கூறுகையில், “ உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்பதால், அவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது; அதுதவிர பொது இடங்களிலும் அவர்கள் போட்டியிட முடியும். இதேபோல், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு இருக்கும் போது, வேலைவாய்ப்பில் மட்டும் மகளிருக்கு இட ஒதுக்கீட்டை மறுப்பது நியாயமல்ல. இதை உறுதி செய்யும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யும்படி தான் நீதிமன்றம் பரிந்துரைத்திருக்க வேண்டுமே தவிர, மகளிருக்கான இட ஒதுக்கீட்டை மறுத்திருக்கக் கூடாது. அதனால் தான் இது சமூக அநீதி. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். தேவைப்பட்டால் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.

வேலைவாய்ப்பில் பிரதிநிதித்துவமும், அதிகாரமும் கிடைக்காத பிரிவினருக்கு அவற்றை வழங்குவதற்கான கருவி தான் இட ஒதுக்கீடு. அந்த வகையில், அரசு வேலைவாய்ப்புகளில் மகளிருக்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைப்பதில்லை என்பதால்தான் தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்புகளில் மகளிருக்கு 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி 1989ஆம் ஆண்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இன்றும்கூட, தமிழக அரசுப் பணிகளில் மகளிரின் பிரதிநிதித்துவம் இன்னும் 30 சதவீத்தத்தை எட்டவில்லை என சுட்டிக்காட்டப்படுகிறது. அப்படி இருக்கும்போது, ஆண்களின் வேலைகளை மகளிர் பறித்துக் கொள்வதாக கூறுவதில் உண்மையல்ல எனவும், உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மகளிரின் உரிமையை பறிக்கும் வகையில் உள்ளதாக மகளிர் உரிமை செயற்பாட்டாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். எனவே, இட ஒதுக்கீட்டு கொள்கையில் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் தமிழக அரசு, இதில் தலையிட்டு மகளிர் வேலைவாய்ப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.