கன்னியாகுமரி: ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை பயணத்தின் இரண்டாவது நாளான இன்று, காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் நோக்கி நடைபயணத்தை மேற்கொண்டார்.
காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, அகில இந்திய அளவில் கட்சியை பலப்படுத்தவும், தொண்டர்களை உற்சாகமடையச் செய்யவும் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொள்கிறார். கன்னியாகுமரியின் காந்தி மண்டபம் நுழைவுவாயிலில் இருந்து நேற்று தொடங்கிய இந்த ஒற்றுமை நடைபயணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், தேசியக் கொடியை வழங்கி தொடங்கி வைத்தார். பின்னர் நடந்த பொதுக்கூட்டத்திற்கு பின்னர், நேற்று இரவு கன்னியாகுமரியில் ராகுல் தாங்கினார்.
இந்திய ஒற்றுமை பயணத்தின் இரண்டாவது நாளான இன்று (செப்.8) காலை கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் கல்லூரியில் இருந்து ராகுல் காந்தி தனது பயணத்தை தொடங்கினார். விவேகானந்தர் கல்லூரியில் இருந்து தொடங்கி, ராஜாக்கமங்களம் வழியாக சுசீந்திரம் நோக்கிச் செல்லும் கொட்டாரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டார்.
இந்த ஒற்றுமை பயணத்தின் போது, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்கள், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், ஏராளமான காங்கிரஸ் தொண்டர்களும் கலந்துகொண்டனர். ராகுல் காந்தி ஒற்றுமை நடைபயணம் மேற்கொள்ளும் பகுதிகளில் போலீஸார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், ஒற்றுமை பயணத்துக்கு இடையூறு இல்லாமல், அந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். பலர் அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
இந்த ஒற்றுமை பயணம் சுசீந்தரம் அருகே உள்ள வைட்டம்பாறை நோக்கிச் சென்று, மதிய உணவுக்குப் பின்னர், அங்கிருந்து நாகர்கோவில் நோக்கி செல்கிறது. இன்று இரவு நாகர்கோவில் ஸ்காட் கல்லூரியில் ராகுல் காந்தி தங்குகிறார். நாளை காலை அங்கிருந்து 3-வது நாள் பயணத்தை அவர் தொடங்குகிறார்.