மக்கள் அதிகளவில் கூடும் பொது இடங்கள், அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் விமான நிலையம், ரயில் நிலையம் போன்ற இடங்களில் வெடிகுண்டு கொண்டுசெல்வது மட்டுமல்ல, விளையாட்டாய் என்னிடம் வெடிகுண்டு இருக்கிறது என்று கூட பேசக்கூடாது. காரணம், இந்தூர் விமான நிலையத்தில் ஒரு நபர் தன் மகளிடம் கூறிய இதேபோன்ற விளையாட்டுத்தனமான பொய்யால் விமானத்தைத் தவறவிட்டிருக்கிறார்.
கடந்த திங்கள்கிழமை இரவு நடந்தாகக் கூறப்படும் இந்த சம்பவத்தில், ஒரு நபர் தன்னுடைய மனைவி மற்றும் மகளுடன் இந்தூர் சர்வதேச விமான நிலையத்துக்கு வந்திருக்கிறார். அப்போது விமான நிலையத்தில் தன் மகளுடன் விளையாடிக்கொண்டிருந்த தந்தை, தன்னுடைய பையில் வெடிகுண்டு இருப்பதாக விளையாட்டாய் கூறியிருக்கிறார். இதனைக்கேட்ட விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக அவர்களின் உடைமைகளைப் பரிசோதனை செய்து, விசாரணை நடத்தினர். இதன் காரணமாக அவர்கள் தாங்கள் செல்லவேண்டிய விமானத்தையும் தவற விட்டனர்.
பின்னர் இதுகுறித்து பேசிய விமான நிலைய இயக்குநர் சி.வி.ரவீந்திரன், “அவர்களது உடைமையில் சந்தேகத்திற்குரியதாக எதுவும் இல்லை. அதுமட்டுமல்லாது, தன்னுடைய பொறுப்பற்ற செயலுக்காக அந்த நபர் மன்னிப்பும் கேட்டார். இருப்பினும், பரிசோதனை மற்றும் விசாரணை காரணமாக மூவரும் தங்கள் விமானத்தைத் தவறவிட்டனர்” கூறினார். மேலும், அவர்கள் `எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்ட பிறகே பாதுகாப்புப் படை அதிகாரிகளால் விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டதாகவும், இதுதொடர்பாக காவல்துறையிடம் விசாரணைக்காக அவர்கள் ஒப்படைக்கப்படவில்லை’ என்றும் ஏரோட்ரோம் காவல் நிலைய அதிகாரியொருவர் தெரிவித்தார்.