குழந்தையின் அழுகையை நிறுத்த அதன் மீது பெற்ற தாயே மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்த ரூபிந்தர் கவுர் என்ற பெண், கணவரைப் பிரிந்து சுடானி கலான் கிராமத்தில் தனது தாய் வீட்டில் மூன்று குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவரது 3 வயது மகன் ஹர்மன் நள்ளிரவில் விடாமல் அழுததால், ரூபிந்தர் கவுர் ஆத்திரமடைந்துள்ளார். உச்ச கட்ட கோபத்திற்கு சென்ற ரூபிந்தர், தான் பெற்ற குழந்தை என்றும் பாராமல் ஹர்மன் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ பற்ற வைத்துள்ளார்.
குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த ரூபிந்தரரின் தாய் மற்றும் அக்கம்பக்கத்தினர் குழந்தையின் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்துள்ளனர். பின் ரூபிந்தரிடம் இருந்து குழந்தையை மீட்டு சண்டிகரில் உள்ள PGIMER மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் 50 சதவீதத்திற்கும் அதிகமான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். உரிய சிகிச்சைக்கு பின் குழந்தையின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து ரூபிந்தரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். இதையடுத்து ரூபிந்தரை கைது செய்த போலீசார் அவர் மீது கொலை முயற்சி மற்றும் சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015 பிரிவு 75ன் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். கணவருடனான திருமண தகராறு காரணமாக அந்தப் பெண் மன அழுத்தத்தில் இருந்ததாக உள்ளூர்வாசிகள் போலீசாரிடம் தெரிவித்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM