“இவன் கதை முடிஞ்சிருச்சு என்கிற நிலைமையில் இருந்து மீண்டு வந்தேன்!" – சந்தானம்|Vikatan Exclusive

ரொம்பவே பக்குவமாக புன்னகைக்கிறார் சந்தானம். கரியரில் வெற்றியோ தோல்வியோ எதையும் பொருட்படுத்தாமல், இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருப்பது அவரது ஸ்டைல். வித்தியாசமான ஜானரில் நடித்த ‘குலுகுலு’வில் நல்ல பெயர் கிடைத்த திருப்தி.. அடுத்து, `ஏஜென்ட் கண்ணாயிரம்’ மற்றும் கன்னட இயக்குநர் பிரசாந்த்ராஜ் இயக்கத்தில் `கிக்’ படங்களில் நடித்து முடித்த சந்தோஷம். ஷுட்டிங்கில் பரபரக்கும் ஹாரர் தில்லர் என பிரமிக்க வைக்கும் சந்தானத்திடம் பேசினேன்.

“ஹீரோ ஆன பிறகு சினிமாவில் கத்துக்கிட்டது என்ன? தயாரிப்பாளரா என்ன அனுபவம் கிடைச்சது? நீங்க நடிச்ச ‘மன்னவன் வந்தானடி’, ‘சர்வர் சுந்தரம்’.. எதிர்பார்ப்புகள் நிறைய இருந்துச்சே, அதெல்லாம் எப்போ வெளியாகும்?” இப்படி பல கேள்விகளை சந்தானத்திடம் முன் வைத்தேன்.

‘கிக்’ படத்தில் தான்யா ஹோப்புடன்..

“நிறையவே கத்துக்கிட்டேன். கத்துக்கிட்டும் இருக்கேன். அந்தப் படங்களை நானும் நிறைய எதிர்பார்த்தேன். நல்லா உழைச்சிருக்கேன். என் சைடிலிருந்து அதிகபட்சம் எவ்வளவு சப்போர்ட் பண்ண முடியுமோ அவ்வளவு சப்போர்ட் பண்ணினேன். ஹீரோவா படங்கள் பண்ண ஆரம்பிச்ச பிறகு சினிமா நிறைய கத்துக்கொடுத்திருக்கு. ‘தில்லுக்கு துட்டு’க்கு முன்னாடி சினிமா எனக்கு அவ்வளவு தெரியாது. அந்தப் படம் செம ஹிட்டாச்சு. சாட்டிலைட் வேல்யூ ஏறுச்சு. அப்ப உடனே மூணு தயாரிப்பாளர்கள் வந்து, என்னை மூணு படங்களுக்கு புக் பண்ணினாங்க. ‘மன்னவன் வந்தானடி’, ‘சர்வர் சுந்தரம்’ இன்னொன்னு ‘ஓடி ஓடி உழைக்கணும்’. மூணு பேருமே படம் ஷூட் தொடங்கினாங்க. அப்புறம், மூணு பேருமே இல்லாத பிரச்னைகளை சொல்லி, அப்படி அப்படியே விட்டுட்டு ஓடிட்டாங்க. அதுக்கப்புறம், ஒரு ரெண்டரை வருஷம் என் வாழ்க்கையே பல பிரச்னைகள்ல மாட்டிகிருச்சு. என்ன பண்ணனும்னே தெரியல. அப்புறம்தான் ‘சக்கப்போடு போடு ராஜா’ பண்ணினேன். அதுவும் பிளாப் ஆகி, அதுக்கபுறம் ‘இவன் கதை முடிச்சிடுச்சு’ என்கிற நிலைமைக்கு வந்துடுச்சு. ஏன்னா அப்ப அந்த மூணு படங்களும் வெளியாகல. ரிலீஸ் ஆன படமும் பிளாப் என்றதும் பயங்கர மன அழுத்தத்துக்கு போனேன். அப்புறம் மறுபடியும் போராட்டம்..

சந்தானம்

அந்த போராட்டத்தோடு ‘தில்லுக்கு துட்டு 2’ பண்ணினேன். கடவுள் அருளால் மீண்டு வந்தேன். என் இத்தனை வருஷ அனுபவத்துல நிறைய கத்துக்கிட்டேன். இந்த சினிமாவுல நிறைய சிக்கல்கள் இருக்குதுனு புரியவச்சிருக்கு. ஏன்னா, ஒருத்தர் படத்தை வாங்கி, உடனே இன்னொருத்தர்கிட்ட விற்குறது கிடையாது. எங்கிட்ட இருந்து உங்ககிட்ட போய், உங்ககிட்ட இருந்து அவர்கிட்ட போய், அவர்கிட்ட இருந்து இன்னொருத்தர்கிட்ட போய்.. கடைசியில அது யார்கிட்ட இருக்குதுனு தெரியாமல் ஆகிடுது.

அந்த படங்கள் வெளிவர்றதுல அந்தத் தயாரிப்பாளர்கள்தான் பொறுப்பெடுத்துக்கணும். சினிமாவுல யார்கிட்ட வேணும்னாலும் படத்தை வித்துக்கலாம். ஆனா, சரியான ஆட்கள்கிட்ட விற்கணும். படத்தை வாங்கினவங்க அதை ரிலீஸ் பண்ணிடுவாங்களானு பார்த்து விற்கணும். இவங்ககிட்ட இருந்து அவங்ககிட்ட போயிருக்குனு ஒவ்வொருத்தரா கைகாட்டும் போது, வாங்கின ஒவ்வொருத்தருக்கும் வட்டி கூடிடுது. சில தயாரிப்பாளர்கள் என்ன பண்றாங்கனா, ஒரு படம் போயிட்டிருக்கும்போது அதன்மீதே, இன்னும் ரெண்டு படங்கள் தொடங்கிடுறாங்க. இல்லைன்னா, ஏற்கெனவே சரியா போகாத படத்தை இப்ப இருக்கற படத்தின் மீதான கடனாக ஆக்கிடுறாங்க. இதெல்லாம் பண்ணக்கூடாது.

சினிமாவுல லாபமோ, நஷ்டமோ ஒரு படம் பண்றோம்னா, அதை சரியா பண்ணிடனும். நல்ல தொழிலான சினிமாவை சூதாட்டம் மாதிரி விளையாடினால், அது எல்லார் வாழ்க்கையை ஸ்பாயில் ஆக்கிடும்.

எனக்கு அப்ப மூணு படங்கள் ரிலீஸ் ஆகாமல், அதுல சம்பளமும் சரியா கிடைக்காமல், அப்புறமும் ஒரு படம் எடுத்து அதுல பெரிய நஷ்டமாகி… அதுல ஒரு ரெண்டரை வருஷம்.. `சக்கப்போடு போடு ராஜா’வுல ஒரு வருஷம்.. மூன்றரை வருஷம் சமாதி கட்டி பொக்கேவும் வச்சாச்சு. `மம்மி’ படம் மாதிரி எழுந்து வந்தேன். அப்புறம்தான் தயாரிப்பாளர்களை எப்படி தேர்ந்தெடுக்கணும் சினிமாவை புரிஞ்சுக்கிட்டேன்.

‘கிக்’ படப்பிடிப்பு நிறைவு நாளில்..

எவ்வளவு சம்பாதிச்சாலும் வயித்துக்கு என்னவோ அதைத்தான் சாப்பிடப்போறோம். இவ்ளோ சாப்பிடுறதுக்காகத்தான் எல்லாருமே சம்பாதிக்கறோம். நம்மளை நம்பி நூறு ரூபாய் கொடுத்து படம் பார்க்கற வர்றாங்க.. அவனை திருப்தி படுத்தினால் தான் சினிமாவில் இனி நிலைக்க முடியும்னு யார் நினைக்கிறாங்களோ அவங்கதான் சினிமாவில் நிலைக்க முடியும்” என அழுத்தம் திருத்தமாக சொல்கிறார் சந்தானம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.