விளாடிவாஸ்டாக்: உக்ரைனின் உணவு தானிய ஒப்பந்தத்தால் வளரும் உலக நாடுகள் ஏமாற்றப்பட்டுள்ளன என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த பிப்ரவரி 24-ம் தேதி முதல் சிறப்பு ராணுவ செயல்பாடு என்ற பெயரில் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. அங்கு பல்வேறு நகரங்களைக் கைப்பற்றிய ரஷ்யா, தொடர்ந்து உக்ரைன் நகரங்கள் மீது குண்டு வீசிய வண்ணம் உள்ளது.
இந்நிலையில் உக்ரைனின் உணவு தானிய ஒப்பந்தம் மூலம் உலக நாடுகள் ஏமாற்றப்பட்டுள்ளன என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் குற்றம்சாட்டியுள்ளார். ரஷ்யாவின் விளாடிவாஸ்டாக் நகரில் நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் அவர் பேசியதாவது:
உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள உணவு தானிய பற்றாக்குறையை சரி செய்வதற்காக, உக்ரைனில் புதிய உணவு தானிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது. ஆனால் அது உண்மையல்ல. இந்த விஷயத்தில் வளரும் நாடுகள் மீண்டும் ஒரு முறை ஏமாற்றப்பட்டுள்ளன. இதுபோன்ற விவகாரங்களில் வளரும் நாடுகள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகின்றன. இந்த அணுகுமுறையால், உலகில் உணவு தானியப் பிரச்சினைகளின் அளவு அதிகரிக்கும் என்பது வெளிப்படையானது. இது முன்னோடியில்லாத மனிதாபிமான பேரழிவுக்கு வழிவகுக்கும்.
உக்ரைன் நாட்டில் ஏற்படுத்தப் பட்டுள்ள உணவு தானிய ஒப்பந்தம், துருக்கி மற்றும் ஐ.நா. சபை உதவியால் நிகழ்த்தப்பட்டது. உக்ரைனிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் உணவு தானியங்கள் உண்மையில் உலகின் ஏழை நாடுகளுக்குச் சென்றடைவதில்லை.
உக்ரைன் துறைமுகங்களில் இருந்து சென்ற 87 கப்பல்களில் இருந்த 60 ஆயிரம் டன் உணவு தானியங்கள் மட்டுமே ஏழை நாடுகளுக்குச் சென்றன. மற்ற பெரும்பாலான உணவு தானியங்கள் ஐரோப்பிய யூனியனில் உள்ள வளமான நாடுகளுக்கே சென்றுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.