குலசேகரம்: குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக சாரல் மழையும், சில இடங்களில் கன மழையும் பெய்து வருகிறது. குறிப்பாக மலை மற்றும் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டம் முழுவதும் மழை பெய்தது. இதனால் பேச்சிப்பாறை அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 45.45 அடியாக உள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணையில் இருந்து 3 ஆயிரம் கனஅடி உபரி நீர் மறுகால் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் கோதையாறு பாயும் திற்பரப்பு, திருவரம்பு, மூவாற்றுமுகம், மற்றும் குழித்துறை தாமிரபரணியாறு பாயும் பகுதிகளில் ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளிலுள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே மழை காரணமாக கோதையாற்றில் அதிகளவில் தண்ணீர் பாயும் நிலையில், பேச்சிப்பாறை அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரும் சேர்ந்ததால் கோதையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் திற்பரப்பு அருவியில் வெள்ளநீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நேற்று முன்தினம் மாலை முதல் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்றும் அருவியில் தண்ணீர் அதிக அளவில் கொட்டியதால் 2வது நாளாக தடை நீடித்தது.