ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு விஷயத்தில் என்ன தீர்வு? என்று அதிமுகவினர் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து கொண்டிருக்கின்றனர். ஏனெனில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு விதமான தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால்
முதல்முறையும்,
இரண்டாவது முறையும் மகிழ்ச்சி அடைந்தனர். மூன்றாவது முறை ஒருகை பார்த்து விடலாம் என்று உச்ச நீதிமன்றத்தை நாடியிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.
இதற்கிடையில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் அலுவலகத்திற்குள் சென்று கட்சியினருடன் ஆலோசனை நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் ஒரு விஷயத்தை கையிலெடுத்துள்ளார். அதாவது, தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபுவிடம் புகார் மனு ஒன்று இன்று காலை அளிக்கப்பட்டுள்ளது. அதில், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் அதிமுக அலுவலகம் வரும் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை அனுமதிக்க கூடாது. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை யாரையும் அனுமதிக்க கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளார்.