பெங்களூரு: பெங்களூருவை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் டி.ஜே.ஆப்ரஹாம் கடந்த 2020-ம் ஆண்டு கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் அளித்த புகார் மனுவில், ”கடந்த 2008 - 10 காலக்கட்டத்தில் முதல்வராக இருந்த எடியூரப்பா அரசு ஒப்பந்தங்களை வழங்குவதிலும், பெங்களூரு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் வீட்டு மனை வழங்கியதிலும் லஞ்சம் பெற்றுள்ளார். இதில் அவரது மகன் விஜயேந்திரா,மருமகன் சஞ்சய், பேரன் சசிதர் மரடி உட்பட 10-க்கும் மேற்பட்டோருக்கு தொடர்பு இருக்கிறது. இந்த புகார் மீது விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இதை எதிர்த்து எடியூரப்பா தாக்கல் செய்த மனுவில், ”குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் சிறப்பு நீதிமன்றம் என் மீதான வழக்கை விசாரிக்க முடியாது” என குறிப்பிட்டார். இதை ஏற்ற சிறப்பு நீதிமன்றம் கடந்த 2021 ஜூலை 8-ம் தேதி, எடியூரப்பா மீதான புகார் மனுவை தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்துஆப்ரஹாம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி சுனில் தத் யாதவ், ‘‘ எடியூரப்பா மீதான தனியாரின் புகாரை விசாரிக்க முடியாது என கூற முடியாது. எனவே சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. எடியூரப்பா உள்ளிட்டோருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் இருந்தால், விசாரணை நடத்தலாம். இந்த ஊழல் புகார் குறித்து சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும்”என்று உத்தரவிட்டார்.