இளையபெருமாள் கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக, விசிக எம்பி ரவிக்குமார், முதல்வர் ஸ்டாலினுக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘இந்திய ஒன்றிய அரசால் மணடல் குழு அமைக்கப்படுவதற்கு முன்னர் உருவாக்கப்பட்டது எல்.இளையபெருமாள் தலைமையிலான ஏழு பேர் கொண்ட குழு.. ’Committee on Untouchability, Economic and Educational Development of the Scheduled Castes’ என ஆங்கிலத்தில் அழைக்கப்பட்ட அந்தக் குழு பொதுவாக ’இளையபெருமாள் கமிட்டி’ என்றே அழைக்கப்படுகிறது.
பட்டியல் சாதிகளின் நலன்களுக்கான மத்திய ஆலோசனை வாரியம் ( Central Advisory Board for Harijan Welfare) செய்த பரிந்துரையின் அடிப்படையில் இந்திய ஒன்றிய அரசு அந்தக் குழுவை அமைத்தது ( Resolution No 14//554-SCT.II Dated April 27, 1965 ). அந்தக் குழுவின் உறுப்பினர்களோடு இளையபெருமாள் இந்தியாவெங்கும் சுற்றுப்பயணம் செய்து பட்டியல் சாதிகள், பழங்குடி மக்களின் சமூக, கல்வி, பொருளாதார மேம்பாட்டுக்கான ஆலோசனைகள் அடங்கிய 431 பக்கங்கள் கொண்ட அறிக்கையை 1969 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் தேதி இந்திய ஒன்றிய அரசில், சட்டம் மற்றும் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த பி.கோவிந்த மேனனிடம் சமர்ப்பித்தார்.
இளையபெருமாள் கமிட்டியின் அறிக்கையை இந்திய ஒன்றிய காங்கிரஸ் அரசு நாடாளுமன்றத்தில் வைக்கவில்லை, அதை செயல்படுத்தவுமில்லை. ஆனால், அப்போது தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், இளையபெருமாள் கமிட்டி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட அர்ச்சகர் நியமனம் குறித்த பரிந்துரையின் முக்கியத்துவத்தைக் கருத்தில்கொண்டு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வகை செய்யும் சிறப்புவாய்ந்த சட்டம் ஒன்றை 1970 ஆம் ஆண்டு கொண்டு வந்தார்.
அதை எதிர்த்து அர்ச்சகர்கள்,மடாதிபதிகள் சார்பில் 12 வழக்குகள் தொடுக்கப்பட்டன. நீதித் துறை வரலாற்றில் ’சேஷம்மாள் மற்றும் இதரர் எதிர் தமிழக அரசு’ என அந்த வழக்கு அறியப்படுகிறது. சேஷம்மாள் வழக்கில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் ’இளையபெருமாள் கமிட்டியின்’ பரிந்துரையின் அடிப்படையில் சமூக சீர்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கில்தான் இந்தத் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சனாதனவாதிகள் ஏற்படுத்திய தடைகளையெல்லாம் தகர்க்கும் விதமாக ’அனைத்து சாதியினரும் அர்ச்சகர்’ ஆவதற்கு வகைசெய்யும் தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பு இளையபெருமாள் கமிட்டியின் பரிந்துரைகள் பல இப்போதும் பொருந்தக்கூடியவை தான் என்பதை உணர்த்துகிறது.
இந்தச் சூழலில் இளையபெருமாள் குழு அறிக்கையில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளில் பொருத்தமான, மாநில அரசால் செயல்படுத்தக்கூடிய பரிந்துரைகள் எவையெவை எனக் கண்டறிந்து அவற்றைத் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தத் தாங்கள் முன்வர வேண்டுமெனப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
1924 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் தேதி பிறந்த எல்.இளையபெருமாள் அவர்களின் நூற்றாண்டு நெருங்கிக்கொண்டிருக்கும் சூழலில் ’இளையபெருமாள் கமிட்டி’ அறிக்கையை செயல்படுத்துவது அவருக்குச் செய்யும் சிறப்பு மட்டுமின்றி தமிழ்நாட்டிலுள்ள ஆதிதிராவிட மக்களுக்குச் செய்யும் பேருதவியாகவும், ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சமூகநீதி சாதனைகளில் ஒன்றாகவும் அமையும்’ என்று லிசிக எம்பf ரவிக்குமார், முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.