பெங்களூரு: கர்நாடக உணவுத் துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான உமேஷ் கத்தி (62) திடீர் மாரடைப்பால் நேற்று காலமானார்.
கர்நாடக மாநிலம் பெலகாவியை சேர்ந்தவர் உமேஷ் கத்தி (61). இவரது தந்தை விஸ்வநாத் கத்தி ஜனதா கட்சியில் பெலகாவி மாவட்ட தலைவராக இருந்ததால், உமேஷ் கத்தியும் அரசியலில் நுழைந்தார். ஜனதா கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளில் இருந்தவர் 2008-ல் பாஜகவில் இணைந்தார்.
ஹுக்கேரி தொகுதியில் 8 முறை வென்ற இவர் முன்னாள் முதல்வர்கள் ஜே.ஹெச்.படேல், பி.எஸ்.எடியூரப்பா, சதானந்த கவுடா மற்றும் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். பெங்களூருவில் உள்ள டாலர்ஸ் காலனியில் மனைவி ஷீலா, மகன் நிகில், மகள் ஸ்நேகாவுடன் வசித்து வந்த உமேஷ் கத்திக்கு நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் எம்.எஸ்.ராமையா மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உமேஷ் கத்தி உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, எடியூரப்பா, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது சொந்த ஊரான பெல்லதங்கவாடியில் அரசு மரியாதையுடன் நேற்று மாலை அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.