வேடசந்தூர்: வேடச்சந்தூர் அருகே குடகனாற்றில் ரசாயன கழிவுகள் கலந்ததால் தண்ணீர் திடீரென்று பச்சை நிறமாக மாறியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்த தொடர் மழை காரணமாக குடகனாற்றில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த தண்ணீர் வேடசந்தூர் அருகே உள்ள அழகாபுரி நீர் தேக்கத்தில் சேமிக்கப்படுகிறது. இந்த நிலையில் வேடசந்தூர் அருகே உள்ள லட்சுமணன்பட்டி தடுப்பணைக்கு வரும் தண்ணீர் கடந்த 2 நாட்களாக கரும்பச்சை நிறத்தில் இருந்தது மேலும் அதிகமான நுரை பொங்கி, தண்ணீரில் துர்நாற்றம் வீசியதால் அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து குடகனாறு பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக திண்டுக்கல் ஆட்சியர், வேடசந்தூர் வட்டாட்சியர் மற்றும் மாசு கட்டுப்பாட்டு அலுவலகத்தில் புகார் செய்துள்ளனர். இது குறித்து வேடசந்தூர் வட்டார விவசாய நிலச் சங்க பொருளாளர் செல்வன் ஆகியோர் கூறியபோது, திண்டுக்கல் நகராட்சி கழிவுநீர், தோல் பதப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் தனியார் நூற்பாலைகளிலிருந்து வெளியேறும் ரசாயன கழிவு நீர் குடகனாற்றில் கலப்பதால் தண்ணீரின் நிறம் பச்சை நிறமாக மாறி, நுரை பொங்கி துர்நாற்றம் வீசுகிறது.
கால்நடைகள் இந்த தண்ணீரை குடித்தால் கால்நடைகளுக்கு நோய் ஏற்பட்டு இறக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும் நொய்யல் ஆற்றில் உள்ள நொய்யல் அணை போல குடகனாறு மூடப்படும் நிலை ஏற்பட்டுவிடும் என்று பொதுமக்கள் விவசாயிகள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே சம்மந்தப்பட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் உடனடியாக இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.